Aug 7, 2013

உணவு பொருட்கள் கொள்முதல் : விடுதி அதிகாரிகளுக்கு புது உத்தரவு

விடுதி மாணவர்களின் உணவு தயாரிக்க, கொள்முதல் செய்யப்படும் பொருட்களில், ஏதாவது பிரச்னை இருந்தால், உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என, நலத்துறை அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும், 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகளில், 97,239 மாணவர்; 42 பழங்குடியினர் நல விடுதிகளில், 2,782 மாணவர்; 301 உண்டு உறைவிட பள்ளிகளில், 31,899 மாணவர் தங்கியுள்ளனர். அதே போல், பிற்படுத்தப்பட்டோருக்காக, 1,294 விடுதிகள் உள்ளன. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கீழ், 710 விடுதி; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை கீழ், 572 விடுதி; சிறுபான்மை நலத்துறை கீழ், 12 விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில், 80,064 மாணவர் தங்கியுள்ளனர். இவற்றில், தங்கி உள்ள மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கு, ஒரு வேளை உணவுக்கு, 600 கிராம் அரிசி செலவிடப்படுகிறது. சமீபத்தில், பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள, அரசு விடுதிகளுக்கு பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இருந்தாலும், பல இடங்களில், மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்றவையும்,
சாப்பாட்டில் புழு போன்ற பிரச்னையும் ஏற்பட்டது. தற்போது, விடுதியில் சமைக்கப் பயன்படும் அரிசி, பருப்பு போன்றவை, அருகில் உள்ள, உணவுப் பொருள் வழங்கல் துறையின் கிடங்குகளில் இருந்து, பெறப்படுகின்றன.
ஒரு மாதத்துக்கு தேவையான, அரிசி மூட்டைகளை, மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். அவ்வாறு கொள்முதல் செய்யும் மூட்டைகளில், புழு, வண்டு போன்றவை இருந்தால், உடனடியாக, திரும்ப ஒப்படைக்க, விடுதி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, உணவு சமைத்த பிறகு, அதில் குறைபாடு காணப்பட்டாலோ, சமைத்த சோற்றில், இறந்த புழு, வண்டு போன்றவை இருந்தாலோ, உடனடியாக, அரிசி மூட்டைகளை, உணவுப் பொருள் வழங்கல் துறையிடமே, மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment