Sep 18, 2017

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்


சேலம் பொன்னம்மாபேட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் 4-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ‘வாட்ஸ் அப்‘ எண்ணிற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனோகர் சிங் (வயது 40) என்பவர் கிருஷ்ணமூர்த்தி வீட்டை வாடகைக்கு எடுத்து, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.9 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக மனோகர் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment