சேலம்: சேலத்தில், கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், விற்பனை செய்யப்படுகிறதா என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
சேலத்தில், மாம்பழங்களை விற்பனை செய்ய, 100க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கடைகள், 50க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ளன. தற்போது, சீசன் நெருங்கி விட்டதால், ஏராளமானோர் மாம்பழங்களை விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான வியாபாரிகள், கார்பைட் கல் வைத்து விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் யூகித்தனர். அதன்படி, நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் அனுராதா தலைமையிலான குழுவினர், நேற்று சின்னக்கடை வீதி மற்றும் முதல் அக்ரஹாரம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வியாபாரிகள் யாரும் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம், எப்போதும் கல் வைத்து பழுக்க வைக்கக்கூடாது என்று எச்சரித்து விட்டு அதிகாரிகள் சென்றனர்.
இதுகுறித்து, டாக்டர் அனுராதா கூறியதாவது: சேலம் மாநகரில் உள்ள, மாம்பழம் மற்றும் வாழைப்பழம் விற்பனை செய்யும் வியாபாரிகள், கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்தோம். 35 கடைகளில் நடந்த ஆய்வில், அது போல் யாரும் பழங்களை விற்பனை செய்யவில்லை என, தெரியவந்தது. இருப்பினும், அவர்கள் எத்தலின் திரவத்தை கொண்டு, பழுக்க வைத்திருப்பது தெரியவந்தது. அவ்வாறு செய்யக்கூடாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment