Apr 12, 2017

சேலத்தில் 40 பழக்கடைகளில் திடீர் ஆய்வு; 15 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சேலம்
சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதையொட்டி பழக்கடைகளில் மாம்பழங்கள் விற்பனை அதிகமாக காணப்படுகிறது. மாம்பழங்களை சிலர் ‘கார்பைடு‘ கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்கிறார்கள் என புகார் எழுந்தது. இந்த மாதிரியான மாம்பழங்களை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 6 குழுக்களை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா அமைத்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று சேலம் கடைவீதி, ராஜகணபதி கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் எந்த ஒரு பழக்கடையிலும் ‘கார்பைடு‘ கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கவில்லை.
சில பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி எத்திலினை திரவமாக பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்திருப்பது தெரியவந்தது. அந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:–
கடைகளில் ‘கார்பைடு‘ கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்கிறார்களா? என நடத்திய ஆய்வில், எந்த பழக்கடையிலும் அவ்வாறு மாம்பழங்களை பழுக்க வைக்கவில்லை. இருந்தபோதிலும் எத்திலினை வாயுவாக பயன்படுத்தாமல், திரவமாக பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க செய்து வைத்திருந்த 12 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.15 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
மேலும் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ மாம்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 40 பழக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 15 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள் வாங்கி சாப்பிடும் மாம்பழத்தை ‘கார்பைடு‘ கற்கள் மூலம் பழுக்க வைக்க கூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஏதேனும் தகவல் தெரியவந்தால் உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம். அதன்பேரில் சம்பந்தப்பட்ட பழக்கடைக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment