Jan 14, 2017

தினம் தினம் டீத்தூள்; பொங்கலுக்கு உருண்டை வெல்லம்: கோவையை கதி கலங்க வைக்கும் சீஸன் கால உணவுப்பொருட்கள் கலப்படம்


வண்ண வண்ண நிறங்களில் நாட்டுச்சர்க்கரை, வெல்லம்.

பொங்கல், சித்திரைக்கனி போன்ற சீஸன் காலங்களில் வெல்லம், கனிவகைகளில் கலப்படும் செய்வதும், அன்றாடம் தேயிலைத்தூளில் கலப்படம் செய்வதும் கோவையில் அதிகரித்து வருகிறது.
தற்போது கோவை மார்க்கெட்டுகளில் உணவுக் கலப்பட தடுப்பு பிரிவினரால் கலப்பட வெல்லம் குறித்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்பட்டு பரபரப்புக்குள்ளாகி உள்ளது.
கடந்த 2 நாட்கள் முன்பு கோவை தாமஸ் வீதியில் உள்ள 2 குடோன்களில் கலப்படம் அச்சுவெல்லம் 720 கிலோவை கைப்பற்றியுள்ளனர் உணவு கலப்பட தடுப்புப்பிரிவு அதிகாரிகள். அதையடுத்து செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோனில் 900 கிலோ கலப்பட உருண்டை வெல்லம் (மண்டை வெல்லம்) பிடிபட்டிருக்கிறது. இதற்கு சில நாட்கள் முன்பு உடையாம்பாளையம் சின்னவேடம்பட்டி அருகே ஒரு குடோனில் 1.5 டன் கலப்பட தேயிலைத்தூளைப் பிடித்துள்ளனர் அதிகாரிகள். இதையொட்டி பல்வேறு தகவல்களை 'தி இந்து'வுக்காக பகிர்ந்து கொண்டனர் கலப்பட தடுப்புப்பிரிவு அலுவலர்கள்.
அதன் விவரம் வருமாறு:
''45 ஆண்டுகளுக்கு முன்பு வரை அஸ்கா சர்க்கரை என்பது ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் இனிப்பாக இருந்து வந்தது. அப்போதெல்லாம் ஏழை எளியவர்களுக்கான டீ, காபியாக இருந்தாலும் விழாக்கால இனிப்புப் பலகாரங்களாக இருந்தாலும் அது நாட்டுச்சக்கரை (கரும்புச்சர்க்கரை), பனங்கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைக் கொண்டே தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது சாதா டீ, அஸ்கா டீ என்று தேநீர் கடைகளில் விற்கப்பட்டும் வந்தது.
அஸ்கா சர்க்கரை, நாட்டுச் சர்க்கரையை விட விலை மிக அதிகம் என்பதால் அதற்கேற்ப அஸ்கா டீயின் விலை அதிகமாக இருந்து வந்தது. கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளே அங்கே கரும்பாலைகள் பூட்டி நாட்டுச்சர்க்கரையை தயாரித்து வந்தனர். பிழியப்படும் கரும்புச்சாற்றில் தூசிகள், மண், கற்கள் போன்றவற்றை வடிகட்டியே ஆரம்பத்தில் காய்ச்சி வந்தனர். பிறகு அந்த தூசி, மண், கல் போன்றவற்றை அகற்ற சோடியம் பை கார்பனேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்த ஆரமபித்தனர்.
இந்த வேதிப்பொருள் சுத்திகரிப்புப் பணியை மட்டும் செய்து வந்தது, நாட்டுச் சர்க்கரைக்கு கொஞ்சம் வெண்மையைத் தர ஆரம்பித்தது. அந்த நிறத்தைப் பார்த்து அதுதான் சுத்தப்படுத்தப்பட்ட நாட்டுச்சர்க்கரை என்று அதையே விரும்பி வாங்க ஆரம்பித்தார்கள் மக்கள். சந்தையில் இத்தகைய நாட்டுச்சர்க்கரைக்கு மவுசு கூடக்கூட ரசாயனம் கலக்காத நாட்டுச் சர்க்கரை கேட்பாரற்றுப் போனது. எனவே கரும்பாலை பூட்டுபவர்கள் எல்லாம் நாட்டுச்சர்க்கரையை வெளுப்பாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதற்காக சோடியம் ஹைட்ரோ சல்பைடு பயன்படுத்தினர்.
இந்த வேதிப் பொருளைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு குறிப்பிட்ட பொருளில் சேர்க்கிறோமோ அந்த அளவுக்கு அப்பொருள் வெளுப்பாகும். இத்துடன் சேஃபோலேட் என்ற வேதிப்பொருளும் சேர்க்கத் தொடங்கினார்கள். ஆட்டுத்தோல் முடியை அகற்றுவதற்கு தோல் வியாபாரிகள் இந்த வேதிப்பொருளை பயன்படுத்துவது வழக்கம். இந்த வேதிப்பொருளை எந்த அளவுக்கு சேர்க்கிறோமே அந்த அளவுக்கு ஆட்டுத்தோலில் ரோமம் ஒட்டாமல் வந்துவிடும். அதேபோல் நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லத்திற்கு வெளுப்பான கவர்ச்சிகரமான வண்ணத்தைத் தருவதும் இந்த வேதிப்பொருள்தான் என்பதால் அதை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இப்படி வேதிப்பொருள் இருப்பதும், அளவுக்கு அதிகமாக இருப்பதும் கூட உணவுக் கலப்பட குற்றத்தில் வந்துவிடுகிறது. அதையெல்லாம் ஒரு காலத்தில் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் கரும்பு விவசாயிகள் தன் விளைபொருளை சர்க்கரை ஆலைகளுக்கே பெரும்பகுதி கொடுக்கத் தொடங்க, அஸ்கா சர்க்கரையின் வரவு மிகுதியாகி அதன் விலை குறைந்தது. அதையே மக்களும் பயன்படுத்த தொடங்கினர். நாட்டுச் சர்க்கரை தேவை என்பது குறைந்து தேவையே இல்லை என்ற நிலையை எட்டிவிட்டது. அதனால் அஸ்கா சர்க்கரையை விட இதன் விலை கூடுதலாகி விட்டது.
அதேசமயம் ஐயப்ப பூஜை, மார்கழி மாதம் கோயில்கள் பூஜை, தைப்பொங்கல் போன்றவைகளுக்கு நாட்டுச்சர்க்கரை, வெல்லத்தின் தேவை சீஸனுக்கு சீஸன் இருந்து வந்தது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மட்டும் இதற்கான தேவை மிகுதியாக வகையாக வந்தது வினை. கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கே கரும்பைக் கொடுத்து விட்டு நாட்டுச் சர்க்கரை காய்ச்சும் பணியை செய்யாததால் அதில் ஏஜண்ட்டுகள் நுழைந்துவிட்டனர்.

(கோவை கடைகளில் உணவுக் கலப்பட தடுப்பு அதிகாரிகளின் ஆய்வு)

கரும்பு விளையும் பகுதிகளில் பெயரளவுக்கு கரும்பு வாங்கி, அதை கொப்பரைகளில் இட்டு காய்ச்சுவதோடு, அதில் அஸ்கா சர்க்கரையையும் கலக்க ஆரம்பித்தனர். நாட்டுச்சர்க்கரை ரூ.65 , ரூ.70 என்று விற்கும் போது அஸ்கா சர்க்கரை ரூ.35, ரூ.30க்கும் கூட கிடைப்பது அவர்களுக்கு வசதியாகி விட்டது. இப்படி தயாராகும் வெல்லங்கள் முந்தைய நாட்டுச்சர்க்கரையின் வெண்மையை விட கூடுதலாக இருப்பதால் ரொம்பவும் வசதியாகப் போய்விட்டது.
சுத்தமான வெல்லம் 3 வெல்லம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் அரை வெல்லம் பயன்படுத்தினாலே அந்த இனிப்பு வந்துவிடுகிறது என்பதால் இந்த அஸ்கா வெல்லத்தையே வாங்கி மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இந்தக்காலத்தில் பெரும்பாலான சர்க்கரை நோயாளியாகி சர்க்கரை பயன்படுத்தக்கூடாது என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். அவர்களை நாட்டுச்சர்க்கரை, பனங் கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தவும் பரிந்துரை செய்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் மக்கள் பலரும் அஸ்கா சர்க்கரையிலிருந்து நாட்டுச்சர்க்கரை மாறிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாட்டுச்சர்க்கரையிலும், வெல்லத்திலும் அஸ்கா கலப்படமாக புகுந்தால் எப்படிப்பட்ட விபரீதம். அதனால்தான் பொங்கல் சீஸன் காலங்களில் குறிவைத்து நாட்டுச்சர்க்கரை, வெல்லம் போன்ற உணவுப்பொருட்களின் மீது மிகுதியாக கவனம் செலுத்துகிறோம்'' என தெரிவித்தார் இந்த கலப்பட வெல்ல பறிமுதலில் ஈடுபட்ட உணவு கலப்பட பிரிவு அலுவலர் ஒருவர்.
அவர் தொடர்ந்து கூறுகையில் ''இப்போதும் சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருந்துகள் தயாரிக்க நாட்டுச்சர்க்கரையை இதே ஆட்கள்தான் தயாரித்துக் கொடுக்கிறார்கள். அது எல்லாம் ரசாயனப் பொருட்களோ, அஸ்காவோ கலக்காமல் சுத்தமாகத்தான் தருகிறார்கள். அப்படியிருக்க இதை மட்டும் ஏன் இப்படி செய்கிறீர்கள்? வாங்கி வைக்கிறீர்கள் என்று கடைக்காரர்களிடம் கேட்டால், 'என்ன சார் செய்வது, நாங்கள் நல்லதை வைத்தாலும் இதைத்தான் விரும்பி வாங்குகிறார்கள் மக்கள். அதனால் அதையே வைக்க வேண்டியிருக்கிறது!' என்கிறார்கள். நாங்கள் பல கடைகளில் நின்று பார்த்தாலும் வியாபாரிகள் சொல்வது உண்மையாகவும் இருக்கிறது. இதில் மக்களாக விழிப்புணர்வு அடைந்தால்தான் உண்டு!' என்றார்.
நாட்டுச்சர்க்கரை, வெல்லம் முக்கியமாக கோவையில் 3 குடோன்களிலிருந்துதான். அதேபோல் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என முக்கிய நகரங்களில் எல்லாம் குடோன்கள் உள்ளது. அவற்றுக்கு ஈரோடு, சேலம், நாமக்கல் பகுதியிலிருந்தே வெல்லம் சப்ளையாகிறது. அதில் சித்தோடு சந்தை பெரிய சந்தையாகும். அங்கேயே இதை தடுத்தால் மற்ற நகரங்களுக்குள் இது நுழையாது என்கிறார்கள் அதிகாரிகள். வெல்லத்தில் அஸ்கா மற்றும் வேதிப்பொருட்கள் கலப்படத்தால் ஈரல் நோய்கள், குடல் தொந்தரவுகள், சர்க்கரை, கொழுப்பு கூடுதல் போன்றவை ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.
'வெல்லமாவது எப்போதாவது, வருடத்திற்கு ஒரு முறைதான் - பொங்கலுக்கு, பஞ்சாமிர்தம், அரவாணைப்பாயசம் போன்றவற்றின் மூலம்தான் எடுத்துக் கொள்கிறார்கள். டீத்தூள் அப்படியில்லை. ஒரு நாளைக்கு சராசரியாக மனிதன் 4 முறையாவது டீ சாப்பிடுகிறான். அதில் உலர வைத்த ஆவாரம் இலை, தேங்காய் பித்து, முந்திரி, புளியங்கொட்டை தோல் என பயன்படுத்துகிறார்கள். இவற்றை ஒரே இடத்தில் வைத்திருந்தால் கலப்படத்திற்கானது என வழக்கு பாய்ந்து விடும் என்பதால் சுத்தமான தேயிலை தூளை ஒரு குடோனிலும், அதில் கலக்கவுள்ள பொருளை வேறொரு குடோனிலும் வைத்துக் கொள்கிறார்கள்.

(அதிகாரிகள் கைப்பற்றிய கலப்பட வெல்லம் )
இரண்டையும் பக்காவாக ரெடி பண்ணிவிட்டு, கடைகளுக்கு தேவை எதுவோ, அந்த அளவு மட்டும் ஓர் இரவில் ஒரு குடோனில் வைத்து கலக்கி பாக்கெட் செய்கிறார்கள். அதை அடுத்தநாள் காலையில் சைக்கிளிலோ, மொபட்டிலோ கொண்டு போய் கடை, கடையாய் போட்டுவிட்டு வந்து விடுகிறார்கள். இவர்கள் குடோனை கண்டுபிடித்து சோதனையிட வேண்டுமென்றால் நடு இரவில்தான் செல்ல வேண்டும். அப்படித்தான் இப்போது ஒரு குடோன் கண்டு பிடிக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேயிலை கலப்படத்தில் பிடிபட்டு யாருக்கு தண்டணை (அபராதம்) வாங்கிக் கொடுத்தோமோ, அதே நபர்தான் திரும்பவும் இதை தொழிலாக செய்திருக்கிறார்!' என்று தெரிவிக்கின்றனர் சமீபத்தில் வெள்ளக்கிணறு பகுதியில் 1.5 டன் கலப்படத்தேயிலையை பிடித்த கலப்பட தடுப்பு அலுவலர்கள்.
அவர்கள் மேலும் கூறும்போது, 'தேயிலையில் கிரேடு 1, கிரேடு 2 என கிரேடு 4 வரையுள்ளது. அதில் நாலாந்தர டீத்தூள் விலைமிகவும் மலிவாக இருக்கும். இதில் நாலாந்தர டீ ரூ.350 கிலோ விலை என்றால் அதில் கால்கிலோ மட்டும் எடுத்து மீதியை கலப்பட பொருளில் கலக்கி விடுகிறார்கள். கலப்பட தூளில் சாயம் ஏற்றி விடுகிறார்கள். டீ கடையில் சாப்பிடும் போது டிக்காஷன் இறங்கும்போது சட்டென்று கீழே இறங்கினால் அது சாயம் ஊட்டப்பட்ட கலப்படப் பொருள் என்று அர்த்தம். அதையே ஸ்ட்ராங் டீ என்று வாங்கி பருகுகிறார்கள். இதை பேக்கரிகள்தான் பெருமளவு வாங்குகின்றன. அவர்கள் வாங்காமல் விட்டாலே இந்தக் கலப்படம் அடியோடு ஒழிந்துவிடும்!' என்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விஜய் கூறுகையில், 'பொதுவாக எல்லா காலங்களிலும் உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்த ஆய்வுகளை குடோன்களிலும் பல்வேறு சோதனைகளை நடத்துகிறோம். அப்படி ஆய்வில் கலப்பட உணவுப்பண்டங்களும் பிடிபட்டுள்ளன. இது விழாக்காலம் என்பதால் கூடுதலாக பிடிபடுகிறது. கலப்படங்கள் மீதான தொடர் நடவடிக்கையின் காரணமாக கோவை மாவட்டத்தில் பெருமளவு உணவுப் பொருள் கலப்படங்கள் நடைபெறுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment