Dec 22, 2016

உணவுபொருள் உரிமம் பெற ஆடிட்டரை அணுகக்கூடாது: அலுவலர் எச்சரிக்கை

சேலம்: சேலம், லீ-பஜார் வர்த்தக சங்க கட்டடத்தில், உணவு பொருள் உரிமம் பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம், நடந்தது.
உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா பேசியதாவது: நேரடியாக உணவுக்கு பயன்படுத்த முடியாத முழு மஞ்சள், நெல் ஆகியவற்றை தனித்தனியே வர்த்தகம் செய்தால், உரிமத்தில் விலக்கு உண்டு. இரண்டையும் சேர்த்து செய்தாலே உரிமம் பெற வேண்டும். ஆண்டுக்கு, 12 லட்ச ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்தால், உணவுபொருள் உரிம கட்டணம், 2,000 ரூபாய். 12 லட்ச ரூபாய்க்கு குறைவான வர்த்தகர்கள், 100 ரூபாய் செலுத்தி, பதிவுச்சான்று பெற்றால் போதும். ஐந்தாண்டு கட்டணத்தை மொத்தமாக செலுத்தி, உரிமம் பெற வசதி உண்டு. அதற்கு மேல், புதுப்பித்து கொள்ள வேண்டும். உரிமம் முடிய, ஒரு மாதத்துக்கு முன்பே, புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். உரிமகாலம் முடிந்துவிட்டால், புதிதாக விண்ணப்பித்தே, உரிமம் பெற வேண்டும். எல்லா விண்ணப்பங்களும், ஆன்லைன் மூலமே, பதிவு செய்ய வேண்டும். உணவுபொருள் உரிமத்துக்கும், ஆடிட்டர்களுக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. எனவே, உரிமம்பெற, எக்காரணம் கொண்டும், ஆடிட்டர்களை அணுக வேண்டாம். அதேபோல, அக்கவுண்டன்ட், நிறுவன மேலாளர்களிடமும், உரிமம் பெறும் பணிகளை ஒப்படைக்கக்கூடாது. வர்த்தகர்கள், நேரடியாக தொடர்பு கொண்டு, உரிமம்பெற முனைப்பு காட்ட வேண்டும். புழு, பூச்சி, எலித்தொல்லைகள் இன்றி, உணவு பொருள் கையாளும் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். சுத்தம், சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அபராதம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை உண்டு. அவை, தொடரும் பட்சத்தில், உரிமம் ரத்து செய்யப்படும். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பொருட்களில், உரிமம் எண் உள்பட எல்லா விவரமும், சம்பந்தப்பட்ட உணவுபொருள் படத்துடன் தெளிவாக இடம் பெற வேண்டும். ஆய்வுக்கு வரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால், உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும். யாரிடமும், பணம் கொடுத்து ஏமாறக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment