சேலம்,
வெல்லத்தில் கலப்படம் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து சேலத்தில் 300 மூட்டை சர்க்கரையை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சர்க்கரை
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த வெல்லம் வியாபாரி ஒருவர், லீ பஜாரில் உள்ள ஒரு வெல்லம் மண்டியில் வெல்லத்தை ஏலத்திற்கு எடுத்து சென்று சில்லரையாக விற்று வருகிறார். இவர் ஏலத்திற்கு எடுக்கும் வெல்லத்திற்கு ரூபாய் கொடுக்காமல் உற்பத்தியாளர்களுக்கு கலப்படம் செய்ய பயன்படும் சர்க்கரை வழங்குவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் வெல்லம் மண்டிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு லாரி ஒன்றில் 50 கிலோ எடை கொண்ட 300 மூட்டை சர்க்கரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
300 மூட்டை சர்க்கரை பறிமுதல்
இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த சர்க்கரை வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து லாரியுடன் 300 சர்க்கரை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் நிறுத்தி வைத்தனர். மேலும் கலப்படம் செய்ய வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக அந்த வியாபாரிக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
இதுதவிர பாதுகாப்பு இல்லாமலும், சரியான பேக்கிங் செய்யாமலும் இருந்த 70 வெல்ல மூட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்க்கரை மற்றும் வெல்லம் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்து சேலம் உடையாப்பட்டியில் உள்ள பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சர்க்கரை மூட்டைகளுடன் லாரி நிறுத்தப்பட்டுள்ள குடோனுக்கு நேற்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அதிகாரியின் அனுமதியில்லாமல் அந்த வெல்லம் வியாபாரி, லாரியில் இருந்து சர்க்கரை மூட்டைகளை இறக்கி குடோனுக்குள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சர்க்கரை மூட்டைகளும் குறைவாக இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் வியாபாரியை எச்சரித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறும் போது, ‘வெல்லத்தில் கலப்படம் செய்ய பயன்படும் அஸ்கா சர்க்கரையை உற்பத்தியாளர்களுக்கு கொடுப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தினோம். அப்போது வெல்லம் வியாபாரி ஒருவர், வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு கலப்படம் செய்வதற்காக சர்க்கரை மூட்டைகளை கொடுக்க கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தோம். மேலும் வெல்லம் மூட்டைகளையும் பறிமுதல் செய்து உள்ளோம். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.
No comments:
Post a Comment