Oct 6, 2016

ஸ்வீட், பேக்கரி கடைகளில் ஆய்வு: காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

ஆத்தூர்: ஆத்தூரில், ஸ்வீட், பேக்கரி கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கலப்பட எண்ணெய், தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், நேற்று, ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆத்தூரில், ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகளின் குடோன்களில் காலாவதியான ஆயில், நெய், நறுமண பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். ஆத்தூர், முல்லைவாடியில், கணேஷ் ஆயில் மில்லில், 'தீபம் எண்ணெய்' என, எழுதப்பட்டிருந்த எண்ணெயில், கலப்படம் இருந்ததை கண்டறிந்தனர். தலா, 15 கிலோ எடை கொண்ட, 36 டின் எண்ணெய் பறிமுதல் செய்து, உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பினர். அதேபோல், ராஜகுரு மிட்டாய் கம்பெனியில் இருந்த, தரமற்ற தேன் மிட்டாய் பறிமுல் செய்து, உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பினர். கலப்பட பொருள் பயன்படுத்திய மூவருக்கு, நோட்டீஸ் வழங்கினர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: ஸ்வீட் தயாரிப்பு தொழிலாளர்கள், கைகளில் கையுறை, தலையில் தொப்பி அணிந்திருக்கவும், நகங்களை சுத்தமாக வெட்டியும் இருக்க வேண்டும். அழுக்கு துணிகளை அணிருந்திருக்க கூடாது. உற்பத்தி செய்த உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில், உரிமையாளர் முகவரி, எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். பாலில் தயாரிக்கும் பொருட்கள் மூன்று நாட்களிலும், இனிப்பு வகை பத்து நாட்களிலும், கார வகைகள், 30 நாள் வரை பயன்படுத்தலாம். சேலம், ஆத்தூர், வாழப்பாடி, இடைப்பாடி, மேட்டூர் உள்பட ஏழு குழுக்கள் அமைத்து, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment