Mar 8, 2016

நாகூர் கந்தூரி விழா காலாவதியான பொருள்களை விற்றால் நடவடிக்கை

காலாவதியான, தயாரிப்பு விவரமில்லாத எந்தவித அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களையும், இறக்குமதி உள்ளிட்ட தகவல் இல்லாத எவ்வித வெளிநாட்டு உணவுப் பொருள்களையும் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் தெரிவித்தார்.
நாகூரில், உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நாகூர் வணிகர் சங்கத் தலைவர் ப. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் பங்கேற்றுப் பேசியது:
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாகூர் கந்தூரி விழாவுக்காக வரும் பக்தர்களுக்கு தரமான உணவு கிடைக்க அனைத்து உணவு விற்பனையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
உணவு விடுதிகள், தேநீர் கடை உள்ளிட்ட அனைத்து உணவு விற்பனையாளர்களும், தங்களது கடையை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் தங்களுடைய சுத்தத்தையும் பராமரிக்க வேண்டும். அதேபோல் சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே வழங்க வேண்டும். தரமான தேயிலை தூளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கேரி பைகளில் டீ பார்சல் வழங்கக் கூடாது.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது. காலாவதியான, தயாரிப்பு விவரமில்லாத எந்தவித அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களையும் விற்பனை செய்யக் கூடாது. அதேபோல் இறக்குமதி உள்ளிட்ட தகவல் இல்லாத எவ்வித வெளிநாட்டு உணவுப் பொருள்களையும் விற்பனை செய்யக் கூடாது. ஆடு, உணவுக்காக வெட்டப்படும் பொழுது நகராட்சியின் ஆட்டுத் தொட்டியில் மட்டுமே வெட்ட வேண்டும்.
ஆய்வுக் குழு அமைப்பு: 5 உணவு பாதுகாப்பு அலுவலர்களைக் கொண்ட குழு, கந்துரி முடியும் வரை ஆய்வுப் பணியில் ஈடுபடும். அவர்கள் சந்தேகப்படும் உணவு மாதிரிகளைச் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பர். ஆய்வு முடிவின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் வணிகர் சங்கச் செயலர் எஸ். மன்சூர்ஷா, பொருளாளர் கே. சரவணப்பெருமாள், முன்னாள் தலைவர் கே. பிலிப்ராஜ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆர். மஹாராஜன் (நாகை வட்டாரம்), எஸ். ஆண்டனி பிரபு (தலைஞாயிறு வட்டாரம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment