Mar 4, 2016

க.பரமத்தி அருகே தனியார் எண்ணெய் ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

க.பரமத்தி அருகே தனியார் எண்ணெய் ஆலையில் கலப்பட சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுகிறதா என உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்த ஆதிரெட்டிபாளையம் அருகே உள்ள குட்டக்காட்டுதோட்டம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் ஆலை உள்ளது. இதே அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (45) என்பவர் நடத்தி வருகிறார்.
இங்கு கேரளத்தில் இருந்து தரமற்ற சமையல் எண்ணெய்யை வாங்கி வந்து அதை மறுச்சுழற்சி செய்து, உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விநியோகிப்பதாக கரூர் மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சிசுந்தரத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் டிபி. ராஜேஷ் உத்தரவின் பேரில், உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மீனாட்சிசுந்தரம், உணவு பாதுகாப்பு உதவி ஆய்வாளர் சுமதி, உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுப்ரமணியம், வட்டாட்சியர் அம்பாயிநாதன், க.பரமத்தி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் புதன்கிழமை ஆலையில் திடீர் சோதனை நடத்தினர்.
அங்குள்ள தொட்டியில் இருந்த எண்ணெய்யை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். பின்னர் அங்கு 21 பேரல் இருந்த ஆயில் மற்றும் தலா 50 கிலோ எடை கொண்ட காஸ்டிக்சோடா கொண்ட 37 மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் கூறியது:
ஆலையில் போலியான சமையல் எண்ணெய் தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஆய்வு செய்தோம். இங்கிருந்து சந்தேகப்படும்படியாக இருந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட எண்ணெய் தஞ்சாவூர் அரசு உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்ப உள்ளோம். பரிசோதனை முடிவில் எண்ணெய் தரம் குறித்து தெரிய வரும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment