Jan 9, 2016

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30 லட்சம் ஜவ்வரிசியை விடுவிக்க வலியுறுத்தல்

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஜவ்வரிசியை சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என, சேலம் சேகோ சர்வ், ஸ்டார்ச் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் தாராசந்த் சுரானா, செயலர் விகாஸ் பாபு, முன்னாள் தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
சேலத்தில் உள்ள சேகோ சர்வ் நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்படும் ஜவ்வரிசிக்கு ஏலத்தின் மூலம் விலை வைத்து வியாபாரிகள் வாங்கி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.
இதனிடையே, எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 வியாபாரிகளிடம் உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்த சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான ஜவ்வரிசியை திருப்பி வழங்காமல் வைத்துள்ளனர். இந்த ஜவ்வரிசியின் தற்போதைய மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.
சேகோ சர்வில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமான ஜவ்வரிசி என்று அறிக்கை கிடைக்கப்பெற்றும் அதனை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஏற்க மறுக்கின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆய்வகத்தின் அறிக்கையையே உணவுப் பாதுகாப்புத் துறையினர் அனுமதிக்கின்றனர்.
ஜவ்வரிசி பரிசோதனை செய்வதில் உள்ள முரண்பாடுகளை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் குமார் ஜெயந்திடம் எடுத்துரைத்த பின்னர், ஜவ்வரிசியை வியாபாரிகளிடம் ஒப்படைக்க 2015 அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் நெருங்கி விட்ட நிலையில் ஜவ்வரிசியை வியாபாரிகளுக்கு திரும்ப வழங்கப்படவில்லை.
மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை சேகோ சர்வ் நிர்வாகத்தில் நடத்தப்படும் ஜவ்வரிசி ஏலத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று முடிவுசெய்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறோம்.
எனவே, வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்த ஜவ்வரிசியை உடனே விடுவிக்க வேண்டும்.
சேலம் சேகோ சர்வ் நிறுவனத்தில் செயல்படும் பரிசோதனை கூடத்தை அங்கீகாரம் பெற்ற பரிசோதனை கூடமாக மாற்ற வேண்டும். இந்தப் போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்றனர்.

No comments:

Post a Comment