Nov 2, 2015

தீபாவளி பலகாரம் தயாரிப்போர் உரிமம் பெற அதிகாரி அறிவுரை

நாமக்கல்: 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவோர், உணவுப்பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உரிமம் அல்லது பதிவு பெற்றுக்கொள்ள வேண்டும்' என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பேக்கரி, திருமண மண்டபங்கள் மற்றும் இதர பகுதிகளில் இனிப்பு மற்றும் கார வகைகளை தயார் செய்பவர்கள், சுத்தமான இடங்களை மட்டுமே தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ பயன்படுத்த வேண்டும். தரமான மூலப்பொருட்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். பாக்கெட் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட லேபிள் கொண்ட தரமான எண்ணெய், வனஸ்பதி, மற்றும் நெய் வகைகள் தயாரிக்க பாதுகாப்பான குடிநீரை பயன்படுத்த வேண்டும். உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. 
அதேபோல், தயாரித்த உணவுப் பொருட்களை, சுகாதார முறையில் மூடி வைத்தும், சேமித்தும் விற்பனை செய்ய வேண்டும். பால் சேர்க்கப்பட்ட மற்றும் சேர்க்கப்படாத இனிப்பு வகைகள், தனித்தனியாக சேமித்து தனித்தனி பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை விட கூடுதலாக வண்ணம் சேர்க்கக்கூடாது. தற்காலிக, பலகார சீட்டு போட்டு பலகாரங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், கட்டாயம் தற்காலிக உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். 
சான்று பெறாத பலகாரம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், சுகாதாரமற்ற முறையில் இனிப்பு, கார வகைகள் தயார் செய்வது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment