Nov 14, 2015

போதிய அதிகாரம் இல்லாத தர நிர்ணய நிறுவனம்: விதிமீறும் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்


இந்திய தர நிர்ணய நிறுவனத்திடம் (பிஐஎஸ்) போதிய அதிகாரம் இல்லாததால் விதிமீறல் நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் மாசடைந்து வரும் நிலையில், பெரும்பாலானோர் குடிப்பதற்காக கேன்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரையே நம்பியுள்ளனர் இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாக் கெட், பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குடி நீரை விற்பனை செய்ய இந்திய தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்) வழங்கும் ஐஎஸ்ஐ தரச் சான்று கட்டாயம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இயங்கி வந்த 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. பின்னர் ஐஎஸ்ஐ தரச் சான்று பெற்றே இயங்கத் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து ஐஎஸ்ஐ குறியீட்டை தவறாக பயன்படுத்தி வரும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை கண்டுபிடித்து, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தரும் பணியை பிஐஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சோதனை நடத்திய பிஐஎஸ் நிறுவனம், காலாவதியான ஐஎஸ்ஐ தரச்சான்றை புதுப்பிக்காமலும், வேறு நிறுவனத்தின் ஐஎஸ்ஐ தரச்சான்று எண்ணை பயன்படுத்தியும் சில நிறுவனங்கள் குடிநீர் தயாரித்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தது.
அந்த நிறுவனங்களிலிருந்து சில குடிநீர் மாதிரிகளை எடுத்துக் கொண்டு, முறைப்படி ஆவணங்களை தயாரித்து சில தினங்களுக்கு பிறகு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங் கினால் மட்டுமே, நிறுவனத்தின் மீதும், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை அமலில் உள்ளது.
தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, வருவாய்த்துறையோ நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், முதலில் நிறுவனத்தின் மின் இணைப்பைத் துண்டித்து, நிறுவனத்துக்கு சீல் வைக்கும். இது போன்ற நடவடிக்கைகளை பிஐஎஸ் நிறுவனங்கள் மேற்கொள்வதில்லை. இதனால் வழக்கை சந்தித்து வரும் நிறுவனங்கள், தீர்ப்பு வரும் வரை தங்கள் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.
குற்றம் செய்திருப்பதற்கான முகாந்திரம் உள்ள நிலையில், அந்நிறுவனத்துக்கு சீல் வைக்காதது தொடர்பாக பிஐஎஸ் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிப்பதற்கு முன்பாக, ஒரு நிறுவனத் துக்கு சீல் வைக்கும் அளவுக்கு எங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கவில்லை என்றார்.
இது தொடர்பாக மாநில குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அந்தந்த மாவட்ட வாருவாய்த் துறை அலுவலர்கள், வழங்கல் அலுவலர்கள் உதவி செய்ய தயாராக உள்ளனர். பிஐஎஸ் நிறுவனம் எங்களை அணுகினால், நாங்கள் விதிமீறல் நிறுவனத்துக்கு சீல் வைப்போம்” என்றார்.
இது தொடர்பாக மீண்டும் பிஐஎஸ் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, “மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது பற்றி நாங்களே முடிவெடுக்க முடியாது. அதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே செய்ய முடியும்” என்றார்.

No comments:

Post a Comment