Sep 19, 2015

நெல்லிச்சாறு விற்பனைக்கு தடை: உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி

சேலம்: சேலம், வின் ஸ்டார் டிரேடர்ஸ் நிறுவன, நெல்லிச்சாறு தயாரிப்புக்கு, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தடை விதித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: சேலம், வின் ஸ்டார் டிரேடர்ஸ் தயாரித்து விற்பனை செய்து வந்த நெல்லிச்சாறு குறித்து, பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, கடந்த, ஆகஸ்ட், 13ம் தேதி நேரடியாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு நடத்தினோம். இதில், நெல்லிச்சாறு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், 'நெல்லிச்சாறு உணவு பாதுகாப்பற்றது, தரம் குறைவானது' என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, நெல்லிச்சாறு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு, அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு, வரும், 15 நாட்களளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட நாளில், நாங்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். அதுவரை விற்பனை செய்யக்கூடாது. இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
வழக்கு தொடர முடிவு: சேலம், வின்ஸ்டார் இந்தியாவின் நிறுவனர் சிவக்குமார் கூறியதாவது: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறி இருக்கும் குற்றச்சாட்டு, நெல்லிச்சாறு விற்பனைக்கு விதித்து இருக்கும் தடை, 100 சதவீதம் தவறான முடிவு. பிற மாவட்டங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் யாரும் நெல்லிச்சாறுக்கு தடை விதிக்கவில்லை. இயற்கையில் கிடைக்கக் கூடிய நெல்லிக்காயில் இருந்து எடுக்கப்படும் சாறில் எவ்வித வேதிப்பொருட்களும் கலப்பட செய்யப்படுவது இல்லை. தற்போது, தடை உத்தரவு பிறப்பித்துள்ள அதிகாரி, சில நாட்களுக்கு முன்னர் வரை, எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், இன்று (நேற்று )கலெக்டர் அலுவலகம் சென்ற அந்த அதிகாரி, திடீரென நெல்லிச்சாறுக்கு தடை விதித்துள்ளார். இந்த சாற்றில் எவ்வித வேதிப்பொருளும் கலப்பபடம் செய்யப்பட வில்லை என, 100 சதவீதம் உத்திரவாதம் வழங்குகிறோம். இந்த பிரச்சனையில், எங்களின் நிறுவனத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment