Aug 21, 2015

உணவு பாதுகாப்பு ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

புதுடில்லி: மும்பை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
'உடல் நலத்தை பராமரிக்கும் வகையிலான உணவுகள், உள்ளிட்ட, சில உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கு முன், அதற்கான அனுமதியை பெற வேண்டும்' என, 2013ல், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு, மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் ஆலோசனை தள்ளுபடி செய்யப்பட்டது. 'இந்த ஆலோசனை, சட்டரீதி யான அங்கீகாரம் பெற்றதல்ல' என, மும்பை ஐகோர்ட் தெரிவித்து விட்டது. இதை எதிர்த்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, ஜெ.எஸ்.கேஹர், நாகப்பன் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
'எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் ஆலோசனைக்கு எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லை' என்ற, மும்பை ஐகோர்ட்டின் உத்தரவு சரியானதே. இந்த விஷயத்தில், கோர்ட்டின் அதிகார வரம்பிற்குள் தலையிடுவதற்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,க்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment