Jun 15, 2015

நூடுல்ஸில் மட்டும்தான் விஷம் இருக்கிறதா?

திடீரென நம் உணவு மீதும், உடல்நலன் மீதும் அரசுகளுக்கு அக்கறை வந்திருக்கிறது. பல மாநிலங்களில் மேகி உள்ளிட்ட நூடுல்ஸ் ரகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு தன் பங்குக்கு மேகி பாக்கெட்டுகளை விற்பனை செய்யாமல் திரும்பப் பெற உத்தரவிட்டதும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. 
இந்த விவகாரத்தில் எல்லோரும் முதல் குற்றவாளியாகச் சுட்டிக் காட்டுவது, ‘மோனோ சோடியம் குளூட்டமேட்’ எனப்படும் அஜினமோட்டோவை! 
ஆனால் கண்ணுக்குத் தெரியாத வில்லன் ஒருவன் இருக்கிறான்... அது, ஈயம் என்கிற காரீயம்! உண்மையில் இதன் அளவு அதிகமாக இருந்ததால்தான், மேகி நூடுல்ஸை மத்திய அரசு திரும்பப் பெற உத்தரவிட்டது! ஆனால் இதுபற்றி யாரும் அதிகம் பேசாததற்குக் காரணம், நூடுல்ஸில் மட்டுமின்றி எல்லா உணவுகளிலும் காரீயம் இருக்கிறது என்பதுதான். குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை கருவிலேயே மழுங்கடிக்கும் இந்த ஆபத்தான ரசாயனம் நம் உணவுத்தட்டில் வந்து சேர்வதற்கு அரசுகள் மட்டுமின்றி எல்லோருமே காரணம். 
மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்கள், ‘மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவில்தான் அஜினமோட்டோ உள்ளது’ என்று சொல்லி தடை செய்யாமல் விட்டன. அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கொஞ்சமாக இதை உட்கொண்டால் பிரச்னை இல்லை. அளவுக்கு அதிகமாகும்போது விளைவுகள் என்ன என்பதிலும் சில சர்ச்சைகள் உள்ளன. 
ஆனால் காரீயம், எப்படியுமே விஷம்! ‘எந்த ஒரு உணவிலும் மில்லியனில் 0.01 பங்கு அளவு காரீயம் இருந்தால் பரவாயில்லை’ என இந்தியாவில் வரையறை செய்திருக்கிறார்கள். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் சோதிக்கப்பட்ட மேகி நூடுல்ஸில் இது 17 என்ற அளவில் இருந்தது. அதாவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1700 மடங்கு அதிகம்! 
அஜினமோட்டோவை உணவின் சுவையைக் கூட்டுவதற்காக தயாரிப்பாளர்களே சேர்க்கிறார்கள். ஆனால் காரீயம் விஷம் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களின் முயற்சி ஏதுமின்றி தானாகவே இது நூடுல்ஸில் சேர்ந்திருக்கிறது. நூடுல்ஸில் மட்டுமில்லை... பாலில் ஆரம்பித்து பீட்சா வரை இங்கு எதைச் சாப்பிட்டாலும் அதோடு சிறிதளவு காரீயத்தையும் சேர்த்தே நாம் சாப்பிடுகிறோம். 
இதற்காக எந்த நிறுவனத்தையும் நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது என்பதே உண்மை!சுத்தம் செய்யும்போது சில நச்சுக்களை உணவிலிருந்து அகற்றலாம்; ஏழைகளின் உணவில் மட்டுமே கலந்திருக்கும் சில நச்சுக்களை மருந்துகளால் அகற்றலாம். ஆனால் காரீயம் என்பது மார்க்கண்டேயன். இயற்கையாகக்கூட அது மக்கிப் போகாது. நீர், நிலம், காற்று என எங்கும் நிறைந்திருக்கும். குடிசைக்குள்ளும் போகும்; மாட மாளிகையையும் விட்டு வைக்காது.
இது உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலந்ததும் கல்லீரல், மூளை, சிறுநீரகம், எலும்புகள் என எங்கும் சென்று படிந்துவிடுகிறது. எந்த அபாயகரமான அறிகுறிகளையும் காட்டாது. கர்ப்பிணியின் உடலுக்குள் சென்றால், தொப்புள்கொடி வழியாக கருவிலிருக்கும் குழந்தையையும் சென்று பாதிக்கும் அளவு இது கொடூரமானது. குறிப்பாக குழந்தைகள்தான் இதன் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 
குழந்தைகளின் மூளை 6 வயது வரை மிக வேகமாக வளர்கிறது; அந்த நேரத்தில்தான் அவர்களின் செரிமான மண்டலமும் முழுவீச்சில் இயங்குகிறது. அப்போது உடலில் புகும் காரீயம், அவர்களது மூளை செயல்பாட்டை பாதித்து, சிந்தனைத்திறனை மழுங்கடிக்கச் செய்கிறது. 
ஏழை நாடுகளில் சுமார் 2 கோடி குழந்தைகள் இப்படி காரீய விஷத்தால் புத்தி சாலித்தனத்தை இழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கணிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதில் இன்னும் 6 லட்சம் குழந்தைகள் இணைகிறார்கள். காரீய நச்சால் ஆண்டுக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். இது தவிர சிறுநீரக செயலிழப்பாலும், ஆண்மைக்குறைவாலும் பாதிக்கப்பட்டவர்கள் பல லட்சம் பேர்.
இவ்வளவு ஆபத்தான காரீயத்தை நாம் எங்கிருந்து பெற்றோம்? மோட்டார் வாகனங்களில் எஞ்சினின் திறனை அதிகரிப்பதற்காக பெட்ரோலோடு ‘டெட்ரா ஈதைல் லெட்’ எனப்படும் வேதிப்பொருளை 1922ம் ஆண்டில் கலந்தார்கள். அது மனிதனை முடக்கும் காரீயத்தை புகையோடு சேர்த்து விஷமாக உமிழ்கிறது எனத் தெரிவதற்கு 64 ஆண்டுகள் ஆனது. 1986ம் ஆண்டில் காரீயம் கலந்த பெட்ரோலை அமெரிக்கா தடை செய்தது.
இந்தியாவில் இந்தத் தடை 2000மாவது ஆண்டில்தான் வந்தது.அதற்குள் நம் சூழலில் காரீயம் நீக்கமறக் கலந்துவிட்டது. அதுமட்டுமில்லை... பழைய பேட்டரிகளை ரீசைக்கிள் செய்யும் நிறுவனங்கள் புகையாகவும் கழிவாகவும் ஏராளமான காரீயத்தை வெளியேற்றின. இன்னமும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. உலகமே இப்போது பெயின்ட்களில் காரீயம் கலப்பதைத் தடை செய்துவிட்டது. இந்தியாவில் இப்படிக் கட்டுப்பாடோ, சரியான கண்காணிப்பு அமைப்புகளோ இல்லாததால், இன்னமும் இப்படிப்பட்ட ஆபத்தான பெயின்ட் டப்பாக்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. 
தவழ்ந்து எழுந்து விளையாடத் துவங்கும் குழந்தை சுவரில் சுரண்டும்போது அதன் நகக்கண்ணில் சேரும் துளியூண்டு பெயின்ட்டில் எவ்வளவு காரீயம் கலந்து, விரல் சப்பும்போது அதன் வயிற்றுக்குள் போகிறது என்பது நமக்குத் தெரியாது. 
பல பாக்கெட் நூடுல்ஸ்களை விட அதன் அளவு அபாயகரமானதாக இருக்கலாம். பக்திமயமாக பல பிள்ளையார் சிலைகளைச் செய்து, வண்ண வண்ண பெயின்ட் அடித்து கடலில் கொண்டுபோய் கரைக்கிறோம். அந்த பெயின்ட்களில் இருக்கும் காரீயம் மீனின் உடலில் கலந்து திரும்பவும் நம் வயிற்றுக்கே வருகிறது என்பது நாம் அறியாத ஒன்று! 
குழந்தைகளுக்கு அழகாக வாங்கிப்போடும் மலிவுவிலை நகைகள், பெண்கள் பெருமளவில் பயன்படுத்தும் காஸ்மெடிக் அயிட்டங்கள், குழந்தைகளுக்காக வாங்கிக்கொடுத்து அவர்கள் உடைத்துப்போடும் எலெக்ட்ரானிக் பொம்மைகள், குப்பைகளில் தூக்கியெறியும் எலெக்ட்ரானிக் அயிட்டங்கள், அலோபதி மருந்துகள் அலுத்துப் போய் நாம் வாங்கிச் சாப்பிடும் சில நாட்டு மருந்துகள், 
சாக்லெட் மேல் சுற்றியிருக்கும் ஃபாயில் பேப்பர், சாப்பிடப் பயன்படுத்தும் பீங்கான் பாத்திரங்கள், பழங்கால தண்ணீர்க் குழாய்கள் என காரீயம் கலந்திருக்கும் பொருட்கள் நம்மைச் சுற்றி எக்கச்சக்கம். நமக்குத் தெரியாமலே நம் உடலில் காரீயம் சென்று கலப்பதைப் போல நம்மை அறியாமலே நாமும் இந்தச் சூழலில் காரீய விஷத்தைக் கலக்கிறோம்.அடுத்தமுறை இப்படி எதையாவது செய்வதற்கு முன்பாக, நம் அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிப்போம்!
பெயின்ட் அடித்த பிள்ளையார் சிலைகளைக் கடலில் கரைக்கிறோம். அந்த பெயின்ட்களில் இருக்கும் காரீய விஷம், மீனின் உடலில் கலந்து திரும்பவும் நம் வயிற்றுக்கே வருகிறது!

No comments:

Post a Comment