Jun 14, 2015

உணவு விழிப்புணர்வுத் தொடர் 20

ஏழைகளின் உணவு என பரோட்டாவைச் சொல்வார்கள். நாள் முழுக்க கடினமாக உழைப்பவர்கள் பலரும் இரவானதும் செல்வது ரோட்டோர பரோட்டா கடைக்குத்தான். இரண்டு பரோட்டாவை பிய்த்துப் போட்டு குருமா ஊற்றிக் குழைத்து சாப்பிட்டால் பில் குறைவாக வரும்; ஆனால் வயிறு நிறைந்துவிடும். 
மறுநாள் காலையில் தூங்கி எழுந்த பிறகுகூட ரொம்ப நேரத்துக்குப் பசி எடுக்காது. டாஸ்மாக் சென்றுவிட்டு போதையோடு வெளியில் வரும் பலரின் விருப்ப உணவாகவும் இது இருக்கிறது. பாரம்பரியமாக இட்லி சாப்பிட்டு வளர்ந்தவர்களின் மண்ணில் இன்று இட்லிக்கடைகளை விட பரோட்டாக் கடைகளின் எண்ணிக்கை அதிகம்!
ஆண்களின் உணவாகவே இருந்த பரோட்டா, மெல்ல மெல்ல சைவ ஹோட்டல்களுக்கும் ஊடுருவத் தொடங்கியபிறகு குழந்தைகளின் விருப்ப மெனுவில் இடம் பிடித்தது. சூடான பரோட்டாவை அடுக்கடுக்காக பிய்த்து சாப்பிடும் அந்த ரசனையால் அது குழந்தைகளை ஈர்க்கிறது. வீட்டில் பரோட்டா செய்வது சிரமம் என்பதால், இப்போது ரெடிமேட் பரோட்டாக்கள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு உறைநிலையில் வைத்துக் கிடைக்கின்றன. அப்படியே தோசைக்கல்லில் போட்டு சூடாக்கினால் போதும்... மணக்க மணக்க பரோட்டா ரெடி!
சற்றே உயர்தர ஹோட்டல்களில் நாண், குல்ச்சா, ரொமாலி ரொட்டி என்று இது வேறு வடிவங்கள் எடுத்திருக்கிறது. ஆனால், ‘எந்த வடிவத்திலும் பரோட்டா தவிர்க்கப்பட வேண்டிய உணவு’ என்கிற பிரசாரம் சமீபகாலமாக சூடு பிடித்திருக்கிறது. கேரளாவில் ‘பரோட்டா எதிர்ப்பு இயக்கம்’ என்றே ஆரம்பித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து தமிழகத்தின் பல நகரங்களிலும் அமைப்புகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. 
பரோட்டா பற்றி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் சொல்லப்படும் விஷயங்களில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது? வாருங்கள்... பரோட்டாவின் சிக்கல்களைப் பார்த்து விடுவோம்!கோதுமையிலிருந்து அதன் சத்துப்பகுதியான தோல் நீக்கப்பட்டு, எஞ்சியுள்ள கழிவுப் பொருட்களால் மஞ்சள் நிற மைதா மாவு தயாராகிறது. இது நீண்ட காலமாக பசைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
1930களில்தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் ‘பேஸ்ட்ரி பவுடர்’. அதாவது, பசை மாவு. இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால், மைதா மாவு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது.ஒட்டும் பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா, சில ரசாயன சுத்திகரிப்புகளுக்குப் பிறகு அழகான பொருளாக, பார்ப்போரை ஈர்க்கும் விதத்தில் பளிச்சென வெள்ளை ஆனது. மைதாவில் இருக்கும் மஞ்சள் நிறத்தை நீக்குவதற்காக ப்ளீச்சிங் கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்.
நாகரிகமான வார்த்தைகளில் சொன்னால், அதன் பெயர் ‘ப்ளீச்சிங் கெமிக்கல்’. புரிகிற மாதிரி சொல்வதானால், ‘பினாயில்’ என்றுதான் சொல்ல வேண்டும். எந்தப் பொருளைப் பயன்படுத்தி நாம் கழிவறைகளைச் சுத்தம் செய்கிறோமோ, அதிலுள்ள ரசாயனப் பொருளோடு சேர்ந்ததுதான் எல்லா வெளுப்பான்களும். பளிச் வெள்ளையோடு எந்தப் பொருளை நீங்கள் பார்த்தாலும், அது இந்த ப்ளீச்சிங் கெமிக்கலின் உதவியோடு வெளுக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
இப்படி மைதாவை வெள்ளையாக்குவதற்காக பென்ஸாயில் பெராக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பென்சாயில் பெராக்சைடு பயன்படுத்தப்படும் மைதா போன்ற உணவுப் பொருட்களை பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் சீனாவும் தடை செய்துள்ளன. ரசாயன மருந்துகள் அதனுடைய பக்கவிளைவு காரணமாக தடை செய்யப்படுவது வழக்கம்தான். ஆனால், ஒரு உணவுப் பொருள் அதன் விளைவுகள் காரணமாகத் தடை செய்யப்படுகிறது என்றால், அதனுடைய பாதிப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மைதாவில் இது மட்டுமே பிரச்னை அல்ல. இதை விட மிக முக்கியமான விஷயம், மைதா மாவை மிருதுவானதாக மாற்றப் பயன்படுத்தும் இன்னொரு ரசாயனம்தான். கோதுமை கெட்டியான மாவாக இருக்கிறது. அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது? நமக்கு கோதுமை ரொட்டியை விட மைதாவால் தயாரிக்கப்படும் நாண், பரோட்டா போன்ற பொருட்கள் பிடித்துப் போனதற்கு அதன் மென்மைதான் காரணம்.
கெட்டியாக இருக்கும் மைதாவை மென்மையானதாக மாற்ற அலாக்சான் (ALLOXAN) என்ற ரசாயனம் பயன்படுகிறது. அலாக்சான் எங்கு பயன்படுகிறது தெரியுமா? மருந்துகளைப் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்களில். அதை வைத்து அங்கு என்ன செய்கிறார்கள்?ஆங்கில மருத்துவத்தில் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால் விலங்குகளுக்கு அந்நோயை வரவழைத்து, பின்பு மருந்து கொடுத்து பரிசோதிப்பார்கள். வலிக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால் எலி, முயல் போன்ற விலங்குகளை காயப்படுத்தி அல்லது வலியை வரவழைத்து அதற்குப் பிறகு மருந்துகளைக் கொடுத்து சோதனை செய்வார்கள்.
இந்த ஆய்வுக்கூடங்களில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ரசாயனம் எலிகளின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களை அழித்து விடுகிறது. இன்சுலின் சுரப்பு படிப்படியாகக் குறைந்து எலிகள் ‘டயாபடிக் எலிகள்’ ஆக மாறுகின்றன. இவ்வாறு அவற்றுக்கு நோயை வரவழைத்துவிட்டு, சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு செய்யப்படுகிறது.
சர்க்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனத்தின் பெயர்தான், அலாக்சான். நாம் இதே பொருளைப் பயன்படுத்தி மைதா மாவை மென்மையாக்குகிறோம். அலாக்சானின் ரசாயன பாதிப்புகளோடு தயாராகும் மைதா, ஏற்கனவே அதில் கலந்துள்ள பென்சாயில் பெராக்சைடு நஞ்சோடு இணைந்து நம் உடலைப் பதம் பார்க்கிறது. 
மைதா அறிமுகமான காலத்திலிருந்து இப்போது வரை நாள்தோறும் உயர்ந்து கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் அதன் பங்கு மகத்தானது. பல நோய்களுக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவற்றில் ஒன்றுதான், சர்க்கரை நோய். ‘உடலில் இன்சுலின் சுரக்கவில்லை அல்லது குறைவாகச் சுரக்கிறது என்பது சர்க்கரை நோய்க்குக் காரணம்’ என்று நமக்குத் தெரியும். ஆனால், இந்த இன்சுலின் ஏன் குறைந்து போகிறது? இது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களில், தினசரி உணவுகளில் கலந்துள்ள ரசாயனங்களை - நோய்க் காரணிகளை நாம் ஆய்விற்கு உட்படுத்தாமல் எந்த ஆராய்ச்சியும் நிறைவுபெறப் போவதில்லை.இவ்வளவு பிரச்னையுள்ள மைதா மாவை நாம் அப்படியே பரோட்டா ஆக்கி சாப்பிட்டு விடுவதில்லை. நாம் ஏற்கனவே பார்த்த - உடல்நலத்தைக் கெடுக்கும் ரீபைண்ட் ஆயிலோடு சேர்த்துத் தயாரிக்கிறோம். இப்படி நச்சு ரசாயனங்களின் கூட்டணியை ஏற்படுத்துகிறோம். நம் உடலில் ஆரோக்கியம் ஆப்சென்ட் ஆவதற்கு இதை விட வேறு காரணங்கள் தேவையா என்ன?
மைதா அறிமுகமான காலத்திலிருந்து இப்போது வரை நாள்தோறும் உயர்ந்து கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் அதன் பங்கு மகத்தானது.

No comments:

Post a Comment