Mar 31, 2015

உக்கடம் பிளாஸ்டிக் விற்பனை கடையில் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை, மார்ச் 31:
உக்கடம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை உக்கடம் அய்யாசாமி கோயில் வீதியை சேர்ந்தவர் ஷேர்சிங்(32). வடமாநிலத்தை சேர்ந்த இவர் குடும்பத்துடன் கோவையில் தங்கி உக்கடம் காய்கறி மார்க்கெட் அருகே பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்கப்படுவதாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.
உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சுருளி, வேலுசாமி, சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று தகவல் கிடைத்த கடையில் திடீர் சோதனை நடத்தினர். அதில் கடையின் உட்புறத்தில் உள்ள அறையில் விற்பனைக்காக 300 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடைக்கு சொந்தமான குடோனில் 400 கிலோ புகையிலை பொருட்கள் என மொத்தம் 700 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஹான்ஸ் புகையிலையில் 3 வகைகள், பான்பராக் புகையிலையில் 3 வகைகள் என விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஷேர்சிங்கிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,இந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, இதில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

No comments:

Post a Comment