Jan 13, 2015

ஓமலூர் பகுதியில் 4 ஆலைகளுக்கு "சீல்

ஓமலூர் பகுதியில் கலப்படம் செய்து வெல்லம் தயாரித்த 4 ஆலைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் சர்க்கரைசெட்டிப்பட்டி, கருப்பூர், காமலாபுரம், தும்பிபாடி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பாலைகள் இயங்கி வருகின்றன. கரும்பைச் சாறுப் பிழிந்து, பாகுக் காய்ச்சி அதிலிருந்து வெல்லம் தயாரிக்கும் இந்த ஆலைகளில் லாப நோக்கில் கலப்படம் செய்யப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனுராதா தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஓமலூர் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பொட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா, மணி என்பவர்களுக்குச் சொந்தமான ஆலைகளில், சர்க்கரை, ரசாயனத்தை பயன்படுத்தி வெல்லம் தயாரித்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 48 மூட்டை சர்க்கரையைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 கரும்பாலைகளுக்கும் "சீல்' வைத்தனர். அதே போன்று, காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரின் ஆலையில் சோதனையிட்டபோது, அங்கு ரசாயனப் பொருள்களைக் கலந்து வெல்லம் தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கிருந்த சூப்பர் பாஸ்பேட் ரசாயன மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலைக்கும் "சீல்' வைத்தனர். மேலும், சேசய்யன்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்குச் சொந்தமான கரும்பாலைக்கும் அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை அங்குள்ளவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓமலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோன்மணி, போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா செய்தியாளர்களிடம் கூறியது:
ஓமலூர் பகுதியில் வெல்லம் உற்பத்தி பிரதான தொழிலாக உள்ளது. லாப நோக்கம், வெல்லம் பொன்னிறமாக வேண்டும் என்பதற்காக சர்க்கரை, ரசாயனத்தைக் கலப்படம் செய்வதாகப் புகார்கள் வந்தன.
இதுகுறித்து ஏற்கனவே முன் எச்சரிக்கை விடுத்திருந்தும் வெல்ல உற்பத்தியாளர்கள் சிலர் மீண்டும் கலப்படம் செய்வதாகத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில், 4 ஆலைகளுக்கு "சீல்' வைக்கப்பட்டது.
மற்ற ஆலைகளில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்று கலப்படம் செய்யப்பட்ட வெல்லங்களை உண்பதால் வயிற்றுவலி, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் என்றார்.
ஆய்வின்போது, ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எம்.இளங்கோவன்,ஆர்.மாரியப்பன், ஏ.சிங்காரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment