Dec 17, 2014

நெய் தயாரிப்பில் செயற்கை! விழிப்புடன் இருக்க அறிவுரை


கோவை : 'அண்ணனுக்கு ஒரு நெய் ரோஸ்ட்டேய்ய்...' என்று சர்வர் இழுத்து கூறும்போதே, ஆர்டர் கொடுத்து காத்திருப்பவர், சிறிது நேரத்தில் அழகாக சுருட்டி மொருகலாக வரப்போகும் நெய் ரோஸ்ட்டை கற்பனை செய்து பார்த்து விடுவார். சுடச்சுட சர்வர் கொண்டு வந்து வைக்கும் அந்த நெய் ரோஸ்ட், ஒரு 'பொய்' ரோஸ்ட் என்பதை அவர் அறிவதில்லை.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்க, உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் நெய்யும் எப்போதோ இணைந்து விட்டாலும், சமீபகாலமாக கலப்பட நெய் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினமும் பல ஆயிரம் டன், சுத்தமான நெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதைவிட அதிகமாக, செயற்கை நெய் உற்பத்தி செய்யப்பட்டு, புழக்கத்தில் விடப்படுகிறது. போதுமான விழிப்புணர்வு இல்லாததால், சந்தையில் அதிக இடத்தையும் பிடித்துள்ளது.
பிரபல நெய் உற்பத்தி நிறுவனங்களின் பெயரில், போலி 'அக்மார்க்' முத்திரையுடன், இந்த போலி நெய் புழக்கத்தில் விடப்படுகிறது. செயற்கை நெய் விற்பனையில் கிடைக்கும் லாபம் காரணமாக, பல்வேறு சிறு நிறுவனங்களும் நெய் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த செயற்கை நெய் தயாரிப்பதற்கு மாட்டுக் கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சணல் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.இவ்வகை நெய்யை பரிசோதனைகள் வாயிலாக மட்டுமே கண்டறிய முடியும் என்பதால், நுகர்வோர் அவற்றின் பாதிப்புகளை அறிய வாய்ப்பில்லை.'நெய் வாசனைக்காக, இறக்குமதி செய்யப்பட்ட 'எசன்ஸ்' கலக்கப்படுகிறது; ஒரு சொட்டு எசன்ஸ் ஊற்றினாலே செயற்கை நெய், சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை விட நறுமணம் மிகுந்து இருக்கும்' என்று கூறி பதற வைக்கிறார், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு நியமன அலுவலர் கதிரவன்.
இது குறித்து அவர் கூறியதாவது: கலப்பட நெய் உற்பத்தியாளர்கள், 10 சதவீதம் சுத்தமான நெய்யும், 90 சதவீதம் வனஸ்பதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தியும் நெய் தயாரிக்கின்றனர். இந்த கலப்படத்தை, பரிசோதனைகள் மூலம் மட்டுமே நிரூபிக்க முடியும். இதை பயன்படுத்திக் கொண்டு, குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுகின்றனர்.கலப்பட நெய் தயாரிப்பு குறித்து புகார்கள் வந்தாலும், போலியான முகவரியில் இந்த உற்பத்தியாளர்கள் இருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த நெய்யை உட்கொள்வதால், அல்சர், கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரச்னைகளை தவிர்க்க, உணவு பாதுகாப்பு துறையிடம் சான்று பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை நுகர்வோர் பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment