Dec 26, 2014

கலப்பட உணவுகளை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் உணவு பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தல்

சேலம், டிச.26:கலப்பட உணவுகளைத் தவிர்ப்பதில் விழிப்புணர்வு அவசியம் என கல்லூரி கருத்தரங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பேசினார்.
தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டியும், சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியும் இணைந்து தேசிய நுகர்வோர் தின விழாவை நடத்தியது. இதில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டி தலைவர் செல்வம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிமொழி, வேதியியல் துறைத்தலைவர் சகுந்தலா, நுகர்வோர் அமைப்பின் பொதுச்செயலாளர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுபா வரவேற்றார். கலப்படம், போலி விளம்பரம் மற்றும் முறையற்ற வர்த்தகத்தால் ஏற்படும் தீமை குறித்து மாணவிகளுக்கு போட்டி நடத்தப்பட்டது. போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
உணவில் நடக்கும் கலப்படம் குறித்து மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா பேசியதாவது:
இன்று அனைத்து உணவுப் பொருட்களிலுமே கலப்படம் நடந்து வருகிறது. பால், சில்லிசிக்கன், சிப்ஸ் வகைகள், குளிர் பானங்களில் சாக்ரின், ரசாயன வண்ணங்கள் கலக்கப்படுகிறது. கலப்பட உணவுகளை உட்கொள்வதால் தாய்ப் பால் உள்பட எல்லாமே விஷமாக மாறி வருகிறது. ஒரு பொருளை வாங்கும் போது அதன் விலை குறை வாக உள்ளதா, இலவசமாக ஏதாவது கிடைக்குமா என்று தான் பார்க்கிறோம். அந்தப் பொருள் தரமானதா என்று கவனிப்பதில்லை. இனிமேல் கவனிக்க வேண் டும். கலப்பட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் உடல் உறுப்புகள் பாதிப்படையும். இது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு காரணமாகிறது. எனவே கலப்பட உணவுகளைத் தவிர்த்து தரமான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். கலப்பட உணவுகளை கண்டு பிடிக்கும் பட்சத்தில் எங்களிடம் தெரிவிக்கலாம். விழிப்புணர்வுடன் இருப்பது மிக அவசியம். இவ்வாறு அனுராதா பேசினார்.
மாவட்ட தொழிலாளர் அலுவலர் இந்தியா, கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கார்குழலி, தமிழ்த்துறைத் தலைவர் செண்பகலட்சுமி மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகள், மாணவி கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment