Nov 24, 2014

அதிகரித்து வரும் போலி மினரல் வாட்டர் நிறுவனங்கள் கண்டு கொள்ளாத அதிகாரிகள்


ஈரோடு, நவ. 24:
ஈரோட்டில் புதிது புதிதாக போலி மினரல் வாட்டர் நிறுவனங்கள் உருவாகி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஐஎன்டியுசி குற்றம்சாட்டியுள்ளது.
ஈரோடு மாவட்ட ஐஎன்டியூசி கவுன்சில் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கவுன்சில் தலைவர் தங்கராஜூ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கதிர்வேல், மகளிர் ஒருங்கிணைப்பாளர் துளசிமணி, துணைத்தலைவர்கள் சுந்தரமூர்த்தி, தனகோடி மற்றும் சுப்ரமணி, குணசேகரன், ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி அகில இந்திய அளவில் அனைத்து தேசிய தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்த உள்ள போராட்டத்தில் ஐஎன்டியூசி சார்பில் அதிகளவில் உறுப்பினர்கள் கலந்துகொள்வது, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குநர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு, நிலுவை தொகைகள் மற்றும் இதர பலன்களை உரிய காலத்தில் வழங்காமல் அலுவலர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் ஏராளமான பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். அதோடு தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மாநகரை சுற்றிலும் ஏராளமான மினரல் வாட்டர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் புதிது, புதிதாக உருவாகியுள்ளன. இந்நிறுவனங்கள் தயாரிக்கும் தண்ணீர் பாட்டில்களில் ஐஎஸ்ஐ., முத்திரையை போலியாக அச்சிட்டு வெறும் சுகாதாரமற்ற தண்ணீரை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. இந்நிறுவனங்களை கண்டறிய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment