Nov 6, 2014

மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா விற்பனை கனஜோர்

திருப்பூர், நவ. 6:
அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா புகையிலை பொருட்களின் விற்பனை, திருப்பூர் மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் கனஜோராக நடந்து வருகிறது.
பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும், சுப்ரீம் கோர்ட் கடந்த 8 மாதங்களுக்கு முன் தடை விதித்தது. அதை தொடர்ந்து, உணவு பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி, புகையிலை பொருட்களை விற்க தமிழக அரசும் தடை விதித்தது.
புகையிலை பொருட்கள் இருப்பு மற்றும் விற்பனை குறித்து கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், மாவட்டந்தோறும் கலெக்டர் தலைமையில், கமிட்டி அமைக்க அரசு உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில், அத்தகைய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிகாரிகள் சோதனை நடத்தாமல், கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். போலீசார் மட்டுமே சோதனை நடத்தி, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படும் புகையிலை பொருட்களான பான்மசாலா, குட்கா போன்றவை இரு மடங்கு விலையில் விற்கப்படுகின்றன.
முன்பு, ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட புகையிலை பொருட்கள், தற்போது 10 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. பான்மசாலா பொருட்களால் தயாரிக்கப்படும் ஜர்தா பீடா, பான் பீடா உள்ளிட்ட பீடா வகைகளும், இரட்டிப்பு விலையில் விற்கப்படுகின்றன.
அரசின் தடையை காரணம் காட்டி, பான்மசாலா, குட்கா புகையிலை பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் விலை என்றாலும், தயங்காமல் பலரும் அவற்றை வாங்கி, வழக்கம் போல் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வியாபாரிகள் அதிக லாபமடைகின்றனர். புகையிலை பொருட்களால், பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளம் வயதினரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதை தடுக்கவே, புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால், திருப்பூர் மாவட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment