Sep 17, 2014

விழுப்புரம் மாவட்டத்தில் உணவு பொருட்களில் கலப்படம் ரவை,மைதா,பால் என நீளும் பட்டியல்


விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பால், ரவை, மைதா, ஆயில் என அனைத்து பொருட்களிலும் கலப்படம் இருப்பதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர். கல்வியறிவில் மிகவும் பின் தங்கிய மாவட்டத்தை குறிவைத்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உணவுப்பொருட்களில் கலப்படம் என்பது பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. உணவு கலப்படத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதனை முற்றிலும் ஒழிக்க முடிய வில்லை. அதில் ஒரு முயற்சியாக மாவட்டந்தோறும் உணவுபாதுகாப்பு நியமன அலுவலர்களை தமி ழக அரசு நியமித்துள்ளது.
இவர்கள் தலைமையின் கீழ் செயல்படும் குழுவின் ஆய்வுக்கு பிறகு கலப்படம் என்பது ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் பொருளாதாரம், கல்வியறிவில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது உணவுபாதுகாப்பு துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே கலப்படத் தொழிலில் ஈடுபட்டிருப்பதும், அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு ஆயில் நிறுவனம் பாமாயிலில், கடலை எண்ணெய் என்று ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களிடம் கடந்த பல மாதங்களாக விற்பனை செய்து ஏமாற்றியுள்ளது.
கோலியனூரை சேர்ந்த தனலட்சுமி ஆயில் மில்லில் பாமாயிலில் கடலை எண்ணெய் என்றும் அதன்மீது மணிலா ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களிடம் ஏமாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர்.
அதே போல் கள்ளக்குறிச்சி பகுதியில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவம் வகையில் குடல் வத்தல்களில் ரசாயன பவுடர்களை கலந்து விற்பனை செய்துவந்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் குடிக்கும் பாலை தரம் குறைவாக விற் பனைசெய்வதும் தெரியவந்தது.
புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சுபிக்ஷா பால் நிறுவனம் விழுப்புரம் மாவட்டத்தில் பால்விற்பனை செய்துவருகிறது. அந்த பாலில் கொழுப்புசத்து குறைத்து தரம் குறைந்த பாலை மக்களிடம் விற்பனை செய்து லாபம் பெற்றுவந்துள்ளது.
பெரம்பலூரைச் சேர்ந்த சக்ரா என்ற பால்நிறுவனம் கள்ளக்குறிச்சி பகுதியில் கொழுப்பு சத்து குறைந்த தரம் குறைவான பாலை மக்களிடம் விற்பனை செய்து பல லட்சம் சம்பாதிப்பது அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல் சேலத்திலிருந்து வரும் தரம்குறைவான வெல்லத்தை கொள்முதல் செய்து பளபளப்பாக இருக்க அதில் கெமிக்கலை சேர்த்து, கள்ளக்குறிச்சி பகுதியில் விற்கின்றனர்.
குழந்தைகள் சாப்பிடும் பிஸ்தா முந்திரி பருப்பிலும், குழந்தைகளுக்கான பால் பவுடர்களில் கலப்படம் இருப்பது மாவட்டத்தில் உறுதியாகியுள்ளது.
குளுக்கோஸ், ரங்கா டீத்தூள்களில் லேபிள்கள் ஒட்டாமலும் தேதி குறிப்பிடாமல் மக்களிடம் விற்பனை செய்ததை உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஜவ்வரிசியில் மரவள்ளிக்கிழங்கு கலந்து விற்பனை செய்தல் என இப்படி மக்கள் பயன்படுத்தும் அனைத்து உணவுப்பொருட்களிலும் கலப்படம் இருப்பதை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் மொத்தம் 16 வகையான பொருட்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக நேற்று விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பிரபல மளிகைக்கடையில் நடந்த சோதனையில் புழுக்கள், வண்டுகள் மிதந்த ரவை, மைதா, கோதுமை பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இப்படி அனைத்து உணவுபொருட்களிலும் கலப்படம் இருப்பது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டாக கலப்பட உணவை சாப்பிட்ட மக்கள் இன்னும் பீதியிலிருந்து மீளவில்லை. கடுமையான குற்றத்தில் ஈடுபட்ட அவர்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையோ வெறும் அபராதம் மட்டும்தான். அதிகபட்சமாக அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரைதான் அபராதம் வசூலித்துள்ளனர்.
கலப்படத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நேரத்தில் கலப்படம், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு வெறும் அபராதத்தை மட்டுமே விதித்து அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க விட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கலப்பட உணவை சாப்பிட்டு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நாங்களும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்கிற ரீதியில் அதிகாரிகள் செயல்பாடு உள்ளது. எனவே கலப்படக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலப்படக்காரர்களும் ஏழைகளே! அதிகாரி புது விளக்கம்
கலப்படம், போலி பிராண்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வில்லை. இது தொடர்பாக மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, கலப்படம், போலி பிராண்டு மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் அவர்களது தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க சட்டத்தில் இடம் உள்ளது.
நாங்கள் அபராதம் மட்டுமே விதிக்கிறோம். இனிமேல் தவறு செய்யமாட்டோம் என்று அவர்கள் கேட்டுக்கொள்வதால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர்களும் ஏழ்மைநிலையில் இருப்பவர்கள்தான், முதல் முறையே அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்று அலட்சியமாக கூறினர்.

No comments:

Post a Comment