Sep 14, 2014

கலப்பட வெல்லம் விற்க முயற்சி உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

சேலம்: சேலத்தில், கரும்பு வெல்ல உற்பத்தியாளர்கள் சிலர், கலப்பட வெல்லத்தை தயாரித்து, செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முயன்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரி, அதை தடுத்து நிறுத்தி, வெல்லத்தை ஆய்வு செய்த பின்னரே, விற்க வேண்டும் என, எச்சரித்தார்.சேலம் மாவட்டத்தில், ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில், 200க்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் உள்ளன. இவர்கள், கரும்பை அரவை செய்து, அதன் மூலமே, அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் தயாரிக்க வேண்டும். ஆனால், சர்க்கரை, சோடியம் பாஸ்பேட் மற்றும் கெமிக்கல் பவுடரை கலந்து, வெல்லம் தயாரிப்பதாக, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் வந்தது. அதனடிப்படையில், நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அவர், வெல்லம் உற்பத்திக்கு தடை விதித்தார்.செவ்வாய்பேட்டை, லீபஜார் மார்க்கெட் வியாபாரிகளும், கலப்பட வெல்லத்தை விற்பனை செய்யக்கூடாது என, அறிவுறுத்தினார். கடந்த, பத்து நாட்களுக்கும் மேலாக வெல்லம் விற்பனை நடக்கவில்லை. இந்நிலையில், வெல்ல உற்பத்தியாளர்கள் சிலர், இரண்டு மினிலாரிகளில், 514 சிப்பம் கொண்ட வெல்லத்தை எடுத்து வந்து, செவ்வாய்பேட்டையில் விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது.மற்ற வெல்ல உற்பத்தியார்கள், உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதாவிடம் புகார் செய்தனர். அவர் ஆய்வு மேற்கொண்டு, தரமானதா, தரமற்றதா என்ற முடிவு வந்தபின் தான், வெல்லத்தை விற்பனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி சென்றார்.

No comments:

Post a Comment