Jul 30, 2014

புரோட்டீன் ஷேக்... நல்லதா கெட்டதா?

புரோட்டீன் ஷேக்...நல்லதா கெட்டதா?



'புரோட்டீன் பவுடர் சாப்பிட்டா உடம்பு ஃபிட்டா இருக்கும்னு சொல்றாங்க... எனக்கு புரோட்டீன் பவுடர் வாங்கிக்கொடு' இன்றைய இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்ததும் வீட்டில் நச்சரிக்க ஆரம்பிக்கிற விஷயம் இது. 'அன்றாட உணவில் இருக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் ஷேக், புரோட்டீன் பவுடர் பயன்படுத்துவது சிறந்தது’ என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.
ஒரு மனிதனுக்கு எவ்வளவு புரதச் சத்து தேவை, புரோட்டீன் ஷேக், பவுடர் போன்றவற்றை எந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம், தேவையான சத்துக்களை உணவின் மூலம் மட்டுமல் லாமல், இதுபோன்ற பானங்களின் வழியே எடுத்துக்கொள்வது சரியா? போன்ற பல்வேறு சந்தேகங்களை மூத்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் முன்பு வைத்தோம்.
'சரியான நேரத்தில், சரியான கேள்வி. புரதச் சத்து என்பது அமினோ அமிலங்களின் கூட்டுச் சங்கிலி. இதுதான் நம் உடல் இயக்கத்துக்கு வலு சேர்க்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம் தேவை. ஆனால், இதில் கால் பங்குகூட நாம் எடுத்துக்கொள்வது இல்லை என்பது தான் உண்மை. இதனால், புரதச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாகப் புரதச் சத்து உடலில் சேர்வதும் எதிர்வினையை ஏற்படுத்திவிடும்.
நம் உடலுக்குத் தேவையான புரதச் சத்தை உண்ணும் உணவின் மூலமாகவே எடுத்துக்கொள்ளலாம். சைவப் பிரியர்கள் பால், தயிர், கீரை வழியாகவும், அசைவப் பிரியர்கள் மீன், முட்டை, கோழி இறைச்சியை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் புரதச் சத்தைப் பெறலாம். இப்படி சாப்பிடும்போது, மற்ற ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் கிடைத்துவிடும். ஆனால், புரோட்டீன் ஷேக், பவுடரை அருந்தும்போது புரதத்தைத் தவிர, மற்ற சத்துக்கள் உடலில் சேருவது இல்லை. தவிர, புரதச் சத்துச் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் தேவைப்படும். இதனால், உடனடியாக அதிக உணவுகளை நாம் சாப்பிட முடியாது.


ஜிம்முக்குச் செல்பவர்கள், அதிகம் உடலுழைப்பு உள்ளவர்களுக்குப் புரதச் சத்து அதிகமாகவே தேவை. அவர்கள் தகுந்த அளவுடன் மற்ற சத்துக்கள் உடலில் சேருவதைப் பாதிக்காமல் இருக்கும்படியும் அருந்த வேண்டும். மேலும், புரதச் சத்துப் பானங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர் களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. சிலர், உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரோட்டீன் ஷேக் பானங்களை மட்டுமே அருந்துகின்றனர். இது மிகவும் தவறு. இதனால், மிகக் கடுமையான பக்க விளைவுகளுக்கு ஆளாக நேரிடும்.
தினமும் நமக்குத் தேவையான அளவு புரதத்தைக் காட்டிலும் அதிகமாக உடலில் சேரும்போது, சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. சிறுநீரகத்தில் கல் தோன்றவும் வாய்ப்பு உண்டு. அதிகப் புரதச் சத்து உடலில் சேரும்போது, இதய நோய், கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதற்கும் காரணமாகி விடுகின்றன. எனவே, புரோட்டீன் ஷேக், பவுடர்களைப் பயன்படுத்துபவர்கள் அவரவர் எடைக்கு எவ்வளவு தேவை என்பதை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு எடுத்துகொள்வதே நல்லது.
தற்போது கார்ப்பரேட் ஜிம்களின் மூலமே புரோட்டீன் ஷேக் அதிகமாகப் பிரபலபடுத்தப்படுகிறது. நம் ஊரில் உள்ள சாதாரண ஜிம்களில் பயிற்சி மேற்கொள்பவர்களை, முட்டையின் வெள்ளைப் பகுதி, பருப்பு, பால், கோழி இறைச்சி போன்றவற்றைத்தான் சாப்பிட சொல்வார்கள். அதுதான் உடலுக்குச் சிறந்தது. ஒரு முட்டையில் ஆறு கிராம் அளவுக்கு புரதச் சத்து இருக்கிறது. இயற்கையான உணவுகளின் மூலம் புரதச் சத்து பெறுவதே ஆரோக்கிய மானது. உடலுக்குப் புரதச் சத்து மிகவும் தேவை. ஆனால், எதையும் அளவோடு பயன்படுத்த வேண்டும்'' என்றார். 
நல்லாக் கேட்டுக்கங்க பாய்ஸ்!

No comments:

Post a Comment