Jun 27, 2014

கேரள மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு



கூடலூர், ஜூன் 27:
தேனி மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள், ஏற்றுமதிக்கு தரம் வாய்ந்தவையா என்று கேரள மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மாந்தோப்புகளில் காசா லட்டு, கல்லா மை, செந்தூரம், மல்கோவா, சப்போட்டா, கிளிமூக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான ஒட்டுரக மா வகைகளை, விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் மாம்பழங்களை, வியாபாரிகள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மாம்பழங்களை சாப்பிடும் போது வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் கேரளாவில், தமிழகத்திலிருந்து வரும் மாம்பழங்களை தடை செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், கேரள மாநிலம் ஆழப்புழையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு துறை உதவி ஆணையாளர் அசரப் அசீன், இடுக்கி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரகுநாத குறுப்பு, சிபு தலைமையில் வந்த அதிகாரிகள் குழு, கூடலூர், பெரியகுளம், போடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ தோட்டங்களில் விவசாயிகளை சந்தித்து ஆய்வு செய்தனர். அவர்களிடம் மாம்பழ சாகுபடி, பழுக்க வைத்தல், இருப்பு வைத்தல் ஆகியவை குறித்து கேட்டறிந்தனர். மேலும் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு தகவல்களை கூறினார்கள். இவர்களுடன் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மீனாட்சிசுந்தரம், பாதுகாப்பு அலுவலர்கள் ஜனகர்ஜோதிநாதன், மதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment