Jun 23, 2014

சுகாதாரமற்ற முறையில் வெட்டப்பட்ட 810 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

பெரம்பூர், ஜூன் 23:
சென்னையில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அனுமதியின்றி, சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி கடைகள் செயல்படுவதாக, சுகாதார துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், மாநகராட்சி மண்டல நல அலுவலர் டாக்டர் இளஞ்செழியன், கால்நடை மருத்துவர் கார்த்திக், துப்புரவு அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
4வது மண்டலத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி, சர்மா நகர், எம்கேபி நகர், வஉசி நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், நடத்திய சோதனையில், சுகாதாரமற்ற முறையில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 810 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அழித்தனர்.
இதுகுறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், வட சென்னையில் ஆட்டு இறைச்சி வெட்டுவதற்கு வசதியாக, புளியந்தோப்பு பகுதியில் மாநகராட்சி ஆட்டிறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வெட்டப்படும் ஆட்டு இறைச்சியில் மாநகராட்சி முத்திரையிடப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
ஆனால், பலர் மாநகராட்சி அனுமதியின்றி, ஆங்காங்கே கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்று வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்வதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. தற்போது, மேற்கொண்ட சோதனையில் தரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment