Jun 18, 2014

ஜெய்ப்பூர் ரயிலில் 3,300 கிலோ சுகாதாரமற்ற ஆட்டிறைச்சி

சென்னை: ஜெய்ப்பூர் - சென்னை வாராந்திர விரைவு ரயிலில் கொண்டு வரப்பட்ட, 3,300 கிலோ சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை, சென்னை, மாநகராட்சியின் சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆட்டிறைச்சி யாருக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
பார்சல் பொருட்கள்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, நேற்று காலை, 9:30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் - சென்னை வாராந்திர விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் இருந்து, பார்சல் பொருட்கள் இறக்கப்பட்டன. ரயில் நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கு இடமான, சில பார்சல் பொருட்களை சோதனை செய்தனர். அதில், 47 பெட்டிகளில், சுகாதாரமற்ற ஆட்டிறைச்சி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து, சென்னை, மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மருத்துவர்கள் ரவீந்திரன், அமீர் உசேன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கொண்ட குழு, ஆட்டு இறைச்சியை பரிசோதித்தது. பொதுவாக, ஒரு கிலோ ஆட்டிறைச்சியை, இரண்டு கிலோ ஐஸ் கட்டியில் பதப்படுத்தி கொண்டு வர வேண்டும். சுகாதாரமான ஆட்டிறைச்சி என்பதற்கான, சுகாதாரத் துறையின் சார்பில், முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும்; ஆடு வெட்டப்படும் இடத்தில், மருத்துவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் போன்ற, எந்தவொரு விதிமுறையும் இதில் பின்பற்றவில்லை.
அழித்து விடுவோம்:
ஒவ்வொரு பெட்டியிலும், 60 - 70 கிலோ என மொத்தம், 3,300 கிலோ சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை, மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 'அதை, கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று, அழித்து விடுவோம்' என, தெரிவித்து சென்றனர். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை முகவரிக்கு அனுப்பப்பட்ட சுகாதாரமற்ற ஆட்டிறைச்சி பார்சல் குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெய்ப்பூரில், கிலோ, 150 ரூபாய்க்கு சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை பெற்று, அதை 400 ரூபாய்க்கு மேல், சென்னையில் விற்று லாபம் பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில், ரயில்களில் கொண்டு வரப்பட்ட சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை, அவ்வப்போது போலீசார் பறிமுதல் செய்தனர்.
விதியை மீறி:
கெடுபிடி அதிகரித்ததை அடுத்து, ஆம்னி பஸ்களிலும், பார்சல் வாகனங்களிலும், விதியை மீறி, ஆட்டிறைச்சி கொண்டு சென்றனர். தற்போது, மீண்டும் ரயிலில் கொண்டு வரத் துவங்கியுள்ளனர்.வரும் நாட்களில், ரயில்களில் வரும் பார்சல் பொருட்களை சோதனை செய்த பின்பே, பார்சல் பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும் என, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment