May 21, 2014

நெல்லை புதிய பஸ்நிலைய கடைகளில் சோதனை காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

நெல்லை, மே 21: 
நெல்லை புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து காலாவதியான உணவு பொருட் களை பறிமுதல் செய்தனர். 
நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாகரன் தலைமையில் மேலப்பாளையம் மண்டல உணவு அலுவலர் இப்ராகிம், நெல்லை மண்டல அலுவலர் காளிமுத்து, தச்சை மண்டல அலுவலர் சங்கரலிங்கம், மானூர் பகுதி ரஞ்சித்குமார், பாளை. புறநகர் கணேசன், கலியனாண்டி ஆகியோர் கொண்ட குழுவினர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவு வதை தடுக்கும் வகையிலும், உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் வைக்க வேண்டும் என்ற கலெக்டரின் உத்தரவின் பேரிலும் இந்த ஆய்வு நடந்தது. 
அங்குள்ள கடைகளில் ஈ மொய்க்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவுபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், மெழுகு தடவிய ஆப்பிள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 
உணவுப்பொருட்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.


No comments:

Post a Comment