May 21, 2014

திருச்சி மாம்பழச்சாலையில் வியாபாரிகள் மீது வழக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு 3,000 கிலோ கார்பைட் மாம்பழம் பறிமுதல்


திருச்சி,மே.21: 
கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், திருச்சி மாம்பழச்சாலையில் கீற்று கொட்டகை அமைத்து கார்பைட் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 3,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டன. 
மாம்பழ சீசன் தொடங்கியதையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சேலம், கிருஷ்ணகிரி, சேந்த மங்கலம், நத்தம், துவரங்குறிச்சி, மேலுர், கள்ளிப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து மாம்பழம் ரகங்களான கல்லாமணி, மல்கோவா, அல்போன்சா, செந்துரம், பங்கனபள்ளி, இமாம்வசுந்து உள்ளிட்ட மாம் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. 
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இறக்குமதியும் செய்யப்படுகின்றன. திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு லாரிகளில் வரும் மாம்பழங்களை திருச்சி மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் வந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். இந்த வருடம் விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் மாங்காய்களை இயற்கையாக பழுக்க வைக்க காலதாமதம் ஆவதால் செயற்கை முறையில் பழுக்க வைக்க சில வியாபாரிகள் குறுக்கு வழியை கையாண்டு வருகின்றனர். ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை காவிரிக்கரையோரத்தில் 6 இடங்களில் பெரிய அளவில் கீற்று கொட்டகை அமைத்ததோடு கார்பைட் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனைக்காக தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. 
இதையடுத்து கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ரெங்கராஜன்,தாசில்தார் பவானி, மாநகராட்சி நிர்வாக பொறியாளர்கள் அருணாசலம்,நா கேஷ், உதவி செயற்பொறியாளர் லட்சுமணமூர்த்தி ஆகியோர் நேற்று காவிரிக் கரையோரத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 
இந்த ஆய்வில், அனைத்து குடோன்களிலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களில் கார்பைடு துள் பொட்டலங்களாக வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து மாம்பழங்களை யும் பறிமுதல் செய்து அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் குழிபறித்து கொட்டி அழித்திட மாநகராட்சி ஆணையர் தண்டபாணிக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். 
மேலும் மாம் பழக் குடோன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாநகராட்சி உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 3,000 கிலோ கார்பைடு மாம்பழங்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு மாநகராட்சி லாரியில் எடுத்து செல்லப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் மதிப்பு இருக்கும். கலெக்டர் நடத் திய அதிரடி சோதனையால் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 அதிரடி தொடரும் 
இது குறித்து கலெக்டர் ஜெயஸ்ரீ கூறுகையில், விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் மாம்பழங்களை விரைவில் பழுக்க வைக்க வியாபாரிகள் இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த மாம்பழத்தை சாப்பிடுவதால் வயிற்றுவலி, வாந்தி ஏற்பட்டு உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட உள்ளதால் வியாபாரிகள் கார்பைட் பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment