Apr 11, 2014

அதிரடி! : சேகோ ஃபேக்டரிக்கு "சீல்' வைத்து அதிகாரிகள்... : ஜவ்வரிசி மாவில் மக்காச்சோள மாவு கலப்படம்

சேந்தமங்கலம்: ஜவ்வரிசி மாவில் கலப்படம் செய்வதற்காக, கர்நாடகாவில் இருந்து, மக்காச்சோளமாவு எடுத்து வந்த லாரியை சிறை பிடித்ததுடன், சோகோ ஆலைக்கு அதிகாரிகள், "சீல்' வைத்தனர்.
தமிழகத்தில், நாமக்கல், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், மரவள்ளி கிழங்கு சாகுபடி, அதிகளவில் செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கின் மூலம் மாவு, ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் அதிகம் உள்ளன.
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மட்டும், 400க்கும் மேற்பட்ட சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து, ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு, வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் மூலம் சேமியா, சிப்ஸ் உள்ளிட்ட, 64 வகையான உணவுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
ஜவ்வரிசி உற்பத்தியில், உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறை பின்பற்றாமல், அரசின் உரிமம் பெறாமல், ஈர மாவு விற்பனை செய்து வருகின்றனர். அந்த ஈர மாவில், மக்காச்சோளம், 75 சதவீதமும், மரவள்ளி கிழங்கு மாவு, 25 சதவீதமும் கலப்படம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் செயல்படும், பல ஜவ்வரிசி ஆலைகளில், மரவள்ளிக் கிழங்கு அரைக்கும் போதே, வேறொரு தொட்டியில், மக்காச்சோள மாவை கொட்டி, தண்ணீர் விட்டு கரைத்து, இரண்டு பாலையும், ஒன்றாக தொட்டியில் விட்டு கலந்து, அதன் பின் தண்ணீரை வடிகட்டி, இரண்டு மாவையும் கலந்து, கலப்பட மாவு தயார் செய்து, மோசடி செய்கின்றனர்.
அவ்வாறு கலப்படம் செய்யப்பட மாவு, ஆத்தூரில் இருந்து, நாமக்கல் மாவட்டங்களுக்கு, அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, செல்லப்பம்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சேகோ ஆலைகளில், மீண்டும் சேகோ கலந்து, ஜவ்வரிசி தயார் செய்கின்றனர்.
மக்காச்சோளம் கலந்த ஜவ்வரிசியை, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வெளிமாநிலங்களுக்கு, அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ள ஆலை உரிமையாளர்கள், வாடகைக்கு மில்களை பிடித்து, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சேந்தமங்கலம் அடுத்த அலங்காநத்தம் பகுதியில் உள்ள செல்வம் என்பருக்கு சொந்தமான, "ராஜேந்திரா சேகோ ஃபேக்டரி'க்கு, கர்நாடகாவில் இருந்து, 16 டன் மக்காச்சோள மாவு கொண்டு வரப்பட்டது. அதையறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், லாரியை சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதற்காக, மக்காச்சோள மாவு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து, அந்த ஆலைக்கு, "சீல்' வைத்ததுடன், லாரியை பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment