Feb 3, 2014

உணவு பாதுகாப்பு உரிமம் பெற நாளை கடைசி : கால நீட்டிப்பு தருவதில் மத்திய அரசு மவுனம்

உணவு பாதுகாப்புத் துறையில், வணிகர்கள் உரிமம் பெற மத்திய அரசு விதித்த கெடு, நாளையுடன் முடிகிறது. வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கால நீட்டிப்பு குறித்து, மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது. நுகர்வோருக்கு கிடைக்கும் உணவுப் பொருட்கள், தரமாக கிடைக்கும் வகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் - 2006ஐ, மத்திய அரசு கொண்டு வந்தது. 
விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 2011ல் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்குள் வர்த்தகம் செய்வோர், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச்சான்று பெற வேண்டும். 
சிறை தண்டனை : அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர், 2,000 ரூபாய் செலுத்தி, உரிமம் பெற வேண்டும். சான்று, உரிமம் பெறாவிட்டால், 1 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை, அபராதம், சிறை தண்டனை அளிக்கும் வகையில், சட்டம் கடுமையாக உள்ளது. இதற்கு, வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு, உரிமம் பெற, இரண்டு முறை அவகாசம் தரப்பட்டது. இதன்படி, மத்திய அரசின் ஓராண்டு அவகாசம், நாளை (பிப்.,4) முடிகிறது. அரசின் கணக்குப்படி, தமிழகத்தில், 5.5 லட்சம் வணிகர்கள் உள்ளனர். இதுவரை, 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்; 32 ஆயிரம் பேர் உரிமம் பெற்றுள்ளனர். இவர்களிலும், பெரும்பாலானோர் உரிமம், பதிவை புதுப்பிக்காமல் உள்ளனர்.
கால நீடிப்பு : "இந்த திட்டத்தில் காலத்திற்கேற்ப திருத்தம் செய்ய வேண்டும்; அதுவரை, சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. பதிவு, உரிமம் பெற, மேலும் அவகாசம் தர வேண்டும்' என, வணிகர்கள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை கால நீடிப்பு குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அரசு மவுனம் சாதித்து வருகிறது. 
இதுகுறித்து, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர், வேல்சங்கர் கூறுகையில், ""இந்த பரச்னை குறித்து, இரண்டு நாட்களுக்கு முன் பிரதமரையும், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தையும் சந்தித்து பேசினோம். "உங்கள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது' என்றனர். அதனால், விரைவில் மத்திய அரசு, வியாபாரிகளின் கோரிக்கை ஏற்று, கால நீட்டிப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

1 comment:

  1. போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது

    ReplyDelete