Feb 3, 2014

முதல்வருக்கு வணிகர்கள் சங்கம் மனு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மிரட்டல்

சேலம்: "தமிழகத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும்' என, வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, சேலம் மாவட்டத் தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் வர்க்கீஸ் ஆகியோர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தால், இந்திய உணவு தொழில்கள் ஒட்டு மொத்தமாக அழியும் நிலை ஏற்படும். இந்த சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, மூன்றாண்டாக மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.தற்போது, இச்சட்டத்தின் கீழ் பதிவு மற்றும் உரிமம் எடுக்க, கால வரையறை இந்தாண்டு பிப்ரவரி வரை இருந்தது. இச்சட்டத்தில், முழுமையான மாற்றங்கள் செய்யாத வரை, இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதற்கான கால வரம்பை மேலும், ஓராண்டு நீட்டிக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்திடம் மனு கொடுத்துள்ளோம்.இந்நிலையில், தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இச்சட்டத்தின்படி பதிவு மற்றும் லைசென்ஸ் எடுக்காவிட்டால், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை, என்று நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். மேலும், கடை கடையாக சென்று மிரட்டி, வழக்குகள் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது, வணிகர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.எனவே, உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். வணிகர்களின் கோரிக்கைகளுக்கு உறுதுணை புரியும் வகையில், சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் செய்யவும், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யவும், மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. வணிகர்களே ! சட்டத்தை மதியுங்கள் , குறைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் ....

    ReplyDelete