Feb 27, 2014

சுகாதார சீர்கேடு புகார் எதிரொலி மாட்டிறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

வாணியம்பாடி, பிப். 27: 
வாணியம்பாடி பகுதியில் உள்ள மாட்டு இறைச்சி கடைகளில் சுகாதார துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். 
வாணியம்பாடி பகுதியை சுற்றியுள்ள முஸ்லீம்பூர், புதூர் ரயில்வே கேட், ஆற்றுமேடு, நேதாஜிநகர், ஜப்ராபாத் ஆகிய இடங்களில் மாட்டு இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளது. இங்கு கடைகளிலேயே மாடுகளை அறுப்பதால் சுற்றுப்புற பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சுகாதாரமற்ற முறையிலும், கன்றுக்குட்டிகளின் இறைச்சியை விற்பதாக அப்பகுதி மக்கள் வேலூர் மிருகவதை தடுப்பு பிரிவுக்கு மனு கொடுத்தனர். அதன்பேரில் வாணியம்பாடி ஆணையாளர் ரவி உத்தரவின்பேரில் சுகாதார துறை ஆய்வாளர்கள் சீனிவாசன், நடராஜன், விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை புதூர் ரயில்வே கேட், ஆற்றுமேடு ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு 15 கன்றுக்குட்டிகளின் இறைச்சிகளை விற்பனைக்காக வைப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகளே அனைத்து இறைச்சிகளையும் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களை எச்சரித்தனர். 
இதனைதொடர்ந்து வாணியம்பாடி பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் தடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்து வந்தனர்.

No comments:

Post a Comment