Jan 12, 2014

உணவு பாதுகாப்பு, தர நிர்ணய சட்டம் உரிமம் பெற கால அவகாசம் ஓராண்டு நீட்டிக்க வேண்டும் மத்திய அமைச்சரிடம், வணிகர் சங்கம் மனு


சென்னை, ஜன. 12: 
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தில் உரிமம் பெற கால அவகாசத்தை ஓராண்டு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை சந்தித்து, வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் மனு அளித்தனர். 
சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தை விமான நிலையத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, பொது செயலாளர் மோகன், மண்டல தலைவர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, இணை செயலாளர் எட்வர்ட், மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், மாரித்தங்கம், இளைஞர் அணி பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: 
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தால் தமிழகத்தில் உணவு தொழிலில் ஈடுபட்டிருக்கும் 15 லட்சம் வணிகர்களும், இந்தியா முழுவதும் ஏறத்தாழ 6 கோடி வணிகர்களும் பாதிக்கப்படுவர். குறிப்பாக சிறிய, நடுத்தர வணிகர்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைவர். இச்சட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பதிவு மற்றும் உரிமம் பெறவில்லை என்றால் ரூ.5 லட்சம் அபராதம், 6 மாத சிறை தண்டனை என்று மிரட்டி வருகின்றனர். எனவே, வணிகர்களை பாதிக்கும் இச்சட்டத்தில் பல்வேறு சட்டத்திருத்தங்களை கொண்டுவரவேண்டும். தற்போது சட்டத்தின்கீழ் பதிவு மற்றும் உரிமம் பெற கால அவகாசம் பிப்ரவரி 4 என்பதை மேலும் ஒரு வருடம் நீட்டித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 
இதைதொடர்ந்து மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறுகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தால் சிறு வணிகர்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக அறிகிறோம். தேவையெனில் உரிமம் பெற கால அவகாசம் 1 வருடம் நீட்டிப்பு வழங்கப்படும். டெல்லியில் வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காணப்படும் என்றார்.

No comments:

Post a Comment