Jan 9, 2014

பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு 252 வாட்டர் கேன் நிறுவனங்களுக்கு தடை


சென்னை, ஜன.9: 
252 வாட்டர் கேன் நிறுவனங்களுக்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 
தமிழகத்தில் 857 குடிநீர் கேன் விற்பனை நிலையங்கள் உள்ளன. பல நிறுவனங்கள் அரசு அனுமதி பெறாமல் இயங்கி , மக்களுக்கு தரமற்ற குடிநீர் வழங்குவதாக புகார்கள் எழுந்தன. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்கை பதிவு செய்து விசாரித்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் நிபந்தனைகளை விதித்தார். இதை தளர்த்த சில நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. பொதுப்பணி துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமன் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 857 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 252 நிறுவனங்கள் வறட்சியான பகுதிகளில் நீர் எடுக்கிறது. 572 நிறுவனங்கள் உகந்த இடத்தில் நீர் எடுக்கிறார்கள். 33 நிறுவனங்கள் சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து நீர் எடுக்கிறார்கள் என கூறப்பட்டு இருந்தது. இதை கேட்ட நீதிபதி, வறட்சியான பகுதியில் நீர் எடுக்கும் 252 நிறுவனங்களுக்கு தடை விதித்தார். 
இதை தொடர்ந்து நீதிபதி கூறுகையில், �தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் செயல்பட வேண்டுமானால், உகந்த இடத்தில் தண்ணீர் எடுக்க வேண்டும். பொதுப்பணி துறை, குடிநீர் வாரிய அனுமதியை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார். 
தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்க பொது செயலாளர் எ.ஷேக்ஸ்பியர் தெரிவிக்கையில், தீர்ப்பு சரியல்ல; எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆரம்பித்துள்ளோம் என்றார். 

No comments:

Post a Comment