Jan 9, 2014

வறட்சி பகுதிகளில் உள்ள 252 தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட தடை பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, ஜன.9-நீர்வளம் குறைவான, வறட்சி பகுதிகளில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்யும் 252 தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த தண்ணீர்கேன் மற்றும் பாக்கெட் தண்ணீர் தரம் குறைவாக இருப்பதாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மாநிலத்துக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில், நிலத்தடி நீர் எடுக்கும் அனுமதி கோரி பதிவு செய்த தனியார் குடிநீர் நிறுவனங்களின் விபரங்களை தமிழக பொதுப்பணித்துறை தாக்கல் செய்யவேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்ப உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.நீர்வளம் அப்போது, பொதுப்பணித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் 855 தனியார் குடிநீர் நிறுவனங்கள் உள்ளன. அதில் 570 நிறுவனங்கள், நீர்வளம் அதிகம் உள்ள பகுதிகளிலும், 252 நிறுவனங்கள், நீர்வளம் குறைவான வறட்சி பகுதிகளில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்கிறது. 33 நிறுவனங்கள், சென்னை மாநகர குடிநீர் (மெட்ரோ வாட்டர்) வழங்கல் வாரியத்தின் தண்ணீரை பெற்று, விற்பனை செயகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து தீர்ப்பாயத்தின் நீதிபதி மற்றும் உறுப்பினர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-செயல்பட தடை நீர்வளம் குறைவான, வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கும் 252 குடிநீர் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதே நேரம், இந்த 252 நிறுவனங்கள், நீர்வளம் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து நீரை எடுத்து வந்து பயன்படுத்திக் கொள்ள அரசிடம் அனுமதி பெற்று செயல்படலாம். அதேபோல, சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் தண்ணீரை பயன்படுத்தும் 33 நிறுவனங்கள், அந்த தண்ணீரை பயன்படுத்துவது குறித்து முறையான அனுமதியை பெறவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 13-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment