Dec 5, 2013

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. 
இப்பொழுதெல்லாம் கடைக்கோடி கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பாக்கெட் பால்தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் போன்று, ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு நிறுவன பால் பாக்கெட்டுகள், கடைகளில் குளிர்பதன பெட்டியில் வைத்து விற்கப்பட்டாலும், இரண்டு நாள்தான் அதற்கு கெடு. அதற்கு மேல் வைத்து விற்றால் அந்த பால் கெட்டுவிடுகிறது. பாலின் இயல்பும் அதுதான். இதனால் சமயங்களில் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. 
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில தனியார் நிறுவனங்கள், தங்களது பாக்கெட் பால் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பாலில் ரசாயனங்களை சேர்ப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயனம் சேர்க்கப்படும் பால் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதால், கடைக்காரர்களிடம் அதனைக் கூறி அவர்களுக்கு கூடுதல் கமிஷன் தருவதாகவும் ஆசைகாட்டி தங்களது பால் பாக்கெட்டுகளை அதிகம் விற்குமாறு கூறுகிறார்கள். கடைக்காரர்களும் அதிக கமிஷன் மற்றும் நஷ்டம் ஏற்படுவதை தடுக்க தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளையே அதிகம் வாங்கி விற்கின்றனர். 
ஆவினுக்கும் கலப்பட பால் அனுப்பும் பண்ணைகள் 
இது ஒருபுறம் இருக்க அரசு நிறுவனமான் ஆவின் போன்ற நிறுவனங்களுக்கு பால் அனுப்பும் பால் பண்ணைகளும், கலப்பட பாலை அனுப்புவதும் நடைபெறுகிறது. 
கடந்த ஆண்டு கூட 'தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பால் பண்ணைகளில், ஒருவித மாவுப் பொருளை தண்ணீரில் கலந்து பால் போல் மாற்றி, ஆவினுக்கு சப்ளை செய்கிறார்கள்’ என்று கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மால்டெக்ஸ் - மால்​டோடெக்ஸ் என்ற 25 கிலோ பவுடர் மூட்டைகளை ஏற்றி வந்த மினி லாரி பிடிபட்டது. 
யூரியாவுடன் மால்டெக்ஸ் - மால்​டோடெக்ஸ் 
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மால்டெக்ஸ் - மால்​டோடெக்ஸ் பவுடரை 1,250 ரூபாய்க்கு வாங்கி 2,000 ரூபாய்க்கு பால் பண்ணைகளுக்கு சப்ளை செய்ததும், ஒரு கிலோ மாவில் 10 லிட்டர் பாலைக் கலந்து 20 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 30 லிட்டர் பால் தயாரிப்பதும். இந்தக் கலப்பட பாலை கேரளாவைச் சேர்ந்த தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் மற்றும் மதுரை ஆவினுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. 
இந்தப் பவுடர் சோயா பீன்ஸ் மாவில் டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பவுடரில் தண்ணீர், சிறிதளவு யூரியா கலந்தால் பால் போன்ற நிறமும் சுவையும் இருக்கும். ஆவின் ஆய்வகத்தில் இந்தப் பாலை சோதித்துக் கண்டறிய வசதிகள் இல்லை. மைசூரில் உள்ள மத்திய உணவு சோதனை ஆய்வகத்தில் மட்டுமே இதை கண்டு பிடிக்க முடியும் என்று நிலையே இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை அப்போது ஆவின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவெனில், ஆளும் கட்சிப் புள்ளிகள் நடத்தும் பால் பண்ணைகளுக்கு இந்தப் பவுடரை சப்ளை செய்வதாக கைதானவர்கள் விஷயத்தைக் கக்கியதாக அப்போது தகவல் கசிந்தது. 
மேலும் வேறு சில நிறுவனங்கள் ஒரு மடங்கு ஒரிஜினல் பாலில், இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து, அது தெரியாமல் இருப்பதற்காகவும், பால் வெண்மையாகவும், கெட்டியாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் வேறு சில ரசாயன பொருட்களை பாலில் கலப்படம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
இந்தப் பாலை குடித்தால் என்ன ஆகும்? 
''கலப்பட பாலை தொடர்ந்து குடித்தால் பல பிரச்னைகள் உண்டாகும். குறிப்பாக, டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் மற்றும் யூரியா கலந்த பாலைத் தொடர்ந்து குடித்தால் அலர்ஜி, வயிற்றுப் போக்கு, தோல் நோய், குறைந்த ரத்த அழுத்தம், கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை ஏற்படும்'' என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில்தான் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கையான பொருட்கள் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநலன் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோரடங்கிய அமர்வு, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது. 
உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய பால் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாத காலம் மட்டுமே சிறைத்தண்டனை என்று இருப்பது போதுமான தண்டனை அல்ல என்றும், எனவே இத்தண்டனையை இன்னும் கடுமையாக்கும் வகையில், அதாவது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் மேலும் தெரிவித்தனர். 
நாடு முழுவதும் புட்டிப்பால் அருந்தும் லட்சக்கணக்கான பச்சிளங்குழந்தைகள், தினமும் கடைகளில் விற்கப்படும் பாலை தாய்ப்பாலாக அருந்தி வரும் நிலையில், மாநில அரசுகள் இதன் தீவிரத்தை உணர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்துவது அவசர அவசியமாகும்.

No comments:

Post a Comment