Nov 13, 2013

அலுவலர்கள் திடீர் கெடுபிடி உணவு பாதுகாப்பு அலுவலகம் கரும்பாலை விவசாயிகள் முற்றுகை விவசாயிகள் கோரிக்கை


சேலம், நவ. 13:
சேலம் மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் கரும்பாலைகளில் சல்பர் அளவு 70 பிபிஎம்க்குள் இருக்கவேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலரின் கெடுபிடியை கண்டித்து அத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். 
சேலத்தை அடுத்த ஓமலூர், காமலாபுரம், பொட்டிபுரம், ஒட்டத்தெரு, தும்பிப்பாடி பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கரும்பாலைகள் உள்ளது. இந்த ஆலைகளில் நேற்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா திடீர் ஆய்வு நடத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், “கரும்பாலைகளில் வெல்லம் மஞ்சள் நிறத்தில் வருவதற்காக சல்பர்டை ஆக்சைடு என்ற கெமிக்கலை 70 பிபிஎம்(பார்ட்ஸ் பெர் மில்லியன்) அளவில் மட்டுமே உபயோகிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் உற்பத்தியாளர்கள் இதை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தீமைகள் குறித்து விளக்கி கூறினோம். மேலும் சந்தேகத்திற்குரிய சில ஆலைகளில் மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில் நேற்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஓமலூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. பல ஆண்டுகளாக நாங்கள் தரமான வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். வெல்லத்தின் கெட்டித் தன்மைக்காகவே சல்பர்டை ஆக்சைடு மற்றும் சூப்பர் பாஸ்பேட் கெமிக்கல் கலக்கப்படுகிறது. தற்போது சல்பர் அளவு 70பிபிஎம் இருக்கவேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அதை உணவு பாதுகாப்பு அலுவலகம் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். மேலும் நசிந்து வரும் தொழிலை மேம்படுத்த சேலம் மாவட்ட கரும்புவெல்ல உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் நாங்கள் தயாரித்த வெல்லத்தை விற்பனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றனர்.

No comments:

Post a Comment