Oct 30, 2013

தரமற்ற எண்ணெய்யால் தயாராகும் இனிப்பு வகைகள் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

தேனி, அக். 30:
தீபாவளி பண்டிகை என்றதுமே பெண்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொள்வது வாடிக்கை. பெண்கள் வீட்டில் பச்சரிசியை இடித்து மாவு தயாரிப்பதும், கடலை மாவு, உளுந்தம் மாவு தயாரிப்பதுமாக பரபரப்பாக இருப்பர். பெண்கள் வீட்டிலேயே எள்ளுருண்டை, எள்ளுச்சீடை, உளுந்த வடை, பருப்பு வடை, பச்சரிசி மாவினாலான அதிரசம், முறுக்கு வகைகள் உள்ளிட்ட பலகாரங்களை சுத்தமான கடலை எண்ணெய்யில் தயாரிப்பர். இப்பலகாரங்களை அக்கம்பக்கம் உள்ளோருக்கும், உறவினர்களுக்கும், வீட்டிற்கு வரும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்வர். இப்பலகாரங்கள் சுமார் ஒரு மாத காலம் வரைகூட கெட்டுப்போகாமலும், உடலுக்கு ஆபத்தை விளைவிக்காமலும் இருக்கும்.
தற்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது. பெரும்பாலான வீடுகளில் கடலை எண்ணெய்க்கு பதி லாக சூரியகாந்தி எண் ணெய், பாமாயில் உபயோ கம் அதிகரித்துள்ளது. தீபாவளிக்காக பொறுமையாக மாவு அரைத்து, எண்ணை சட்டி முன்பு அமர்ந்து பலகாரம் தயாரிப்பது வேகமான யுகத்தில் சாத்தியமற்றதாக மாறிவிட்டது.தீபாவளி பண்டிகைக்கு ஏற்படும் கிராக்கியை பயன்படுத்தி பலர் விலை குறை வான பாமாயில், தரமற்ற சூரியகாந்தி எண்ணெய் மூலம் இனிப்புகளை தயார் செய்கின்றனர். இதில் பண்டிகைக் காலத்திற்காக சந்தா நடத்துபவர்கள், உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக தனியார் சிலரிடம் விலைகுறைவாக இனிப்பு ஆர்டர் கொடுக்கின்றனர். ஆர்டர் பிடிப்பவர்களும் தரமற்ற எண்ணெய் மூலம் இனிப்புகளை தயாரித்து வழங்கும் நிலை உள்ளது. தற்போது மழைகாலமாக உள்ளதால், தரமற்ற எண்ணெய்யால் தயாரிக்கப்படும் பலகாரங்களை உண்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
சுகாதாரத்துறை தீபாவளி பண்டிகைக்கு தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்கள் குறித்து ஆய்வு செய்து சுகாதாரமற்ற பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment