Oct 30, 2013

குடோன்களில் அதிரடி ரெய்டு மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல் வைப்பு ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ஈரோடு, அக். 30:
ஈரோட்டில் நேற்று அனுமதியின்றி மினரல் வாட்டர் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இதே பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை குடோனையும் அதிகாரிகள் கண்டுபிடித்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் இந்திராநகர் பகுதியில் அனுமதியின்றி ஐ.எஸ்.ஐ. முத்திரையிடாமல் மினரல் வாட்டர் தயாரித்து விற்பதாகவும், இதே பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை பதுக்கி வைத்து மூட்டை, மூட்டையாக விற்பனை செய்வதாகவும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துதது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், பூபாலன், முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஒரு மினரல் வாட்டர் தயாரிப்பு கம்பெனியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஐ.எஸ்.ஐ. முத்திரையிடாமலும் அனுமதியின்றியும் மினரல் வாட்டர் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைத்தனர்.பின்னர் இதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமான குடோனில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஹான்ஸ், குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 23 மூட்டைகள் கொண்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment