Oct 31, 2013

ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்கும் மருந்துக்கு ரூ. 1120; தூத்துக்குடி உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் அம்பலம் மருந்துகள் அறைக்கு சீல் வைத்து அதிரடி, சேம்பிள் எடுத்து சோதனை எடையை குறைக்க விஐபிக்கள் சென்ற அதிர்ச்சி தகவலால் பரபரப்பு





தூத்துக்குடி: ஒரு வாரம் சர்பத் போன்ற பொருளை  சாப்பிட்டால் உடல் எடை குறைந்து விடும் என்று கூறி எந்தவித லைசென்ஸ் இல்லாமல் வீட்டில் கிளினிக் நடத்தி வந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து அதனை சீல் வைத்தனர். இந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள், வி.ஐ.பிக்கள் வந்து அதனை குடித்து சென்றுள்ள விபரம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி சிவன் கோயில் அருகில், அண்ணாநகர் 11வது தெருவில் உள்ள வீட்டில் ஹெர்பா லைப் என்கிற பவுடருடன் சில மருந்துகளை சேர்த்து சர்பத் போன்று தயாரித்து உடல் எடையை குறைப்பதற்காகவும், ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் வழங்கி வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இது சம்பந்தமாக டாக்டர் மற்றும் பொதுமக்கள்  சார்பிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிவன் கோயில் தெரு அருகே உள்ள இதுபோன்ற இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்ற போது இந்த தகவலை முன் கூட்டியே தெரிந்து கொண்டே அந்த நபர் கடையை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன், சந்திரமோகன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், டைட்டஸ் பெர்ணாண்டோ, நீதிமோகன் ஆகியோர் கொண்ட குழுவினர்  சாதாரணமாக புகாருக்குரிய வீட்டிற்கு உடல் எடையை குறைக்க டிரீட்மென்டிற்கு செல்வது போல் சென்றனர். நியமன அதிகாரி ஜெகதீஸ்சந்திரபோஸ் மற்றும் இரண்டு அலுவலர்கள் மட்டும் முதலில் வீட்டிற்குள் சென்றனர். மற்றவர்கள் வெளியில் நின்றுள்ளனர்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஜெகதீஸ் சந்திரபோஸ் அங்கிருந்த நபரிடம் கூற அவர்கள் ஒரு டம்ளரில் இருந்த சர்பத் போன்ற பொருளை குடிக்க  வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். மூன்றாவது நாளிலே ரிசல்ட் தெரியும். ஒரு வாரத்திற்கு மொத்தம் 1120 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெகதீஸ்சந்திரபோஸ் சர்பத் போன்ற பொருளில் என்ன சேர்க்கிறீர்கள். இது என்ன வகையான மருந்து என்று கேட்கவும் ஹெர்பா லைப் என்னும் பவுடரில் சில மருந்துகளை
சேர்த்து தயாரித்துள்ளது. ஹெர்பா லைப்பில் என்ன மருந்துகள் சேர்ந்துள்ளது என்கிற விபரம் அதில் எழுதப்பட்டுள்ளது என்று காண்பித்துள்ளார்.
நீங்களே சர்பத் போன்ற பொருளை தயாரித்து உடல் ஆரோக்கியம், எப்போதும் சோர்வு இல்லாமல் இருக்கவும், எடையை குறைக்கவும், தொப்பையை அகற்றவும் இதனை குடித்தால் குணமாகிவிடும் என்று கூறுகிறீர்கள். இதனை எப்படி நம்ப முடியும். இதுபோன்று விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் எதுவும் பெற்றுள்ளீர்களா, அரசின் அனுமதி எதுவும் இருக்கிறதா, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் எதுவும் பெற்றுள்ளீர்களா என்று கேட்கவும் சம்பந்தப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது போன்று நீங்கள் கொடுக்க கூடிய சர்பத் போன்ற பொருள் என்ன  வேலை செய்யும் என்பதை சொல்லுங்கள் என்று கூறவும் குமாரால் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்தார்.
அண்ணாநகர் 11வது தெருவில் இந்த கிளினிக் போன்று நடத்தி வரும் ஜான் ஜேக்கப், மெர்சிராணி ஆகியோரிடமும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இதனை நாங்கள் நடத்துவதற்கு எங்களுக்கு கம்பெனி அனுமதி கொடுத்திருப்பதாக ஆங்கிலத்தில் பிரேம் செய்யப்பட்ட போட்டோவை காண்பித்தனர். அதனை பார்த்த உணவு பாதுகாப்புத்துறையினர் அதில் உள்ள முதல் பாராவை படித்து அதில் என்ன எழுதியுள்ளது என்று சொல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அதற்கு அவர்கள் சொல்ல முடியாமல் விழித்ததாக கூறப்படுகிறது.
இந்த கிளினிக்கிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அரசு அதிகாரிகள், வி.ஐ.பிக்கள் என்று மக்கள் மிக அதிகமாக வந்து சென்றுள்ளது தெரியவந்தது. அண்ணாநகர் 11வது தெருவில் கடந்த சுமார் 6 மாதமாக இவை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்தவித லைசென்ஸ் இல்லாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி அந்த கிளிளின்கை சீல் வைக்க முதலில் அதிகாரிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் வீடோடு சேர்ந்து இருந்ததால் அந்த மருந்துகளை சேம்பிள் எடுத்த அதிகாரிகள் மருந்துகள் முழுவதையும் வீட்டின் ஒரு அறையில் போட்டு சீல் வைத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த ஆய்வு, வாக்குவாதம் போன்ற பிரச்னையால் அந்த பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
மருந்து மாதிரி நெல்லையில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. ஆய்வு அறிக்கை வந்தவுடன் அந்த அறிக்கையின் பேரில் இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆய்வு அறிக்கை ஒரு வாரத்தில் வந்துவிடும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது சம்பந்தமாக உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் ஜெகதீஸ்சந்திரபோஸ் கூறியதாவது;
தூத்துக்குடி அண்ணாநகரில் உடல் எடையை குறைப்பதாக கூறி போலியாக மருந்து வழங்கி வருவதாக டாக்டர் மற்றும் சிலரிடம் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து அண்ணாநகர் 11வது தெருவில் உள்ள கிளினிக் போன்று நடத்தி வரும் வீட்டில் சோதனை செய்தோம். ஹெர்பா லைப் என்னும் பவுடருடன் சிலவற்றை  சேர்த்து மிக்சியில் அரைத்து சர்பத் போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வந்தனர்.
அவர்கள் என்னென்ன பொருட்கள் போட்டுள்ளனர் என்று தெரியவில்லை. அது சம்பந்தமாக விசாரணை செய்ததில் அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதனால் இது போலியான சர்பத் போன்ற பொருளாகத்தான் இருக்கும். வாங்கிங் செல்வதும், அளவுக்கு சாப்பிடுதல், உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் தான் உடல் எடையை குறைக்க முடியும். இதுபோன்ற சர்பத் போன்ற போலி பொருட்கள் மூலம் எந்த காலத்திலும் உடல் எடை குறையாது. சாப்பிடும் போது ஆரோக்கியமாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் உடலில் பல்வேறு நோய்களை இதனை சாப்பிடும் போது உண்டாக்கி விடும். இதன் மூலம் உயிர் இழப்பு கூட ஏற்படும். இதுபோன்ற சில இடங்களில் மக்களை ஏமாற்றி உடல் எடையை குறைப்பதாக கூறி கொடுக்கப்பட்ட மருந்துகள் மூலம் சில ஆண்டுகளில் உயிர்இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். யார் எதனை சொன்னாலும் நம்பி வீணாக பணத்தை கொடுத்து நோயை உருவாக்கும் பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது. தூத்துக்குடியில் பிடிபட்டவற்றை சோதனைக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கிளினிக் போன்று நடத்த கூடாது. அவர்கள் வைத்திருந்த மருந்துகள் அனைத்தும் ஒரு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட நியமன அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment