Jun 2, 2013

குட்கா, பான்மசாலா தடை தீவிரமாக அமல்படுத்தப்படுமா?

புகையிலையில் 3,000 வகையான நச்சுப் பொருட்கள் உள்ளன. போதையை ஏற்படுத்தும், "நிகோட்டின்' இதில் ஒன்று. மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை விட, கடுமையான பாதிப்பை, புகையிலை ஏற்படுத்துகிறது. ஆண்டுக்கு, 10 லட்சம் பேர், புகையிலையால் ஏற்படும் புற்றுநோய்க்கு பலியாகின்றனர். புற்றுநோய் பாதிக்கப்பட்டோரில் 43 சதவீதம் பேர், சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளனர். இந்நிலையில், குட்கா, பான்மசாலா போன்றவற்றை தடை செய்தது வரவேற்கத் தக்கது. புகையிலை பொருட்களை, பள்ளி, கல்லூரி வளாகங்களிலிருந்து, 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் விற்க வேண்டும் என, சட்டம் உள்ளது. ஆனால், இச்சட்டத்தை யாரும் பின்பற்றுவதில்லை. இதனால், இளைய சமூகத்தினர் கைகளில், புகையிலைப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன. சிறு வயதிலேயே, புகையிலைப் பழக்கத்துக்கு, இளைஞர்கள் உள்ளாகின்றனர். இந்நிலையில், எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில், குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இத்தடையை முழுமையாக அமலுக்குக் கொண்டு வரவேண்டும். ஆனால், சட்ட அமலாக்கம் பெரும் சவாலாக இருக்கும் என, கருதுகிறோம். சட்டம் வந்த சில நாட்களுக்கு அதை அமல்படுத்திவிட்டு, அதன்பின் விட்டுவிட்டால், தடை செய்த பொருட்களின் விற்பனை, கள்ள சந்தையில் அதிகரித்துவிடும். சட்ட அமலாக்கம் சோடை போனால், தடை விதித்ததற்கு பலன் கிடைக்காது. தடை செய்த நோக்கமும் நிறைவேறாது. எனவே, குட்கா, பான்மசாலா தடைச் சட்டத்தை துவக்கம் முதலே, தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அப்போது தான், புற்றுநோயிலிருந்து வருங்கால சமூகத்தை காக்க முடியும்.

விதுபாலா, இணை பேராசிரியர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை

வாய் வழியாக உட்கொள்ளும் பொருட்கள் எதுவும், உடலை பாதிக்கக் கூடாது. அப்படி பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை தடை செய்யலாம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுப்படி, உடல்நிலையை பாதிக்கக் கூடிய, "நிகோட்டினை' உருவாக்கும் புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்படுகின்றன. இந்த அடிப்படையில் தான், குட்கா, பான்மசாலா ஆகியவற்றை, தமிழக அரசு, தடை செய்துள்ளது. ஒரு பொருளை தடை செய்யும் போது, அதைப் பயன்படுத்துவது சட்ட விரோதம் என்ற எண்ணம், மக்கள் மத்தியில் ஏற்படுகிறது. இதனால், அப்பொருளை உபயோகிக்க அச்சப்படுவர். இதுவே, தடை செய்ததன் நோக்கத்தை வெற்றியடையச் செய்கிறது. அதேபோல், இளைஞர்கள் மத்தியில் இதன் புழக்கம் வெகுவாகக் குறையும். சிகரெட் குடிப்பதை ஹீரோயிசமாக இளைஞர்கள் நினைக்கின்றனர். போதை வஸ்துகளை பயன்படுத்தும்போதும், ஹீரோயிசம் தான் அவர்கள் மனதில் ஏற்படுகிறது. இதனால், தடை என்பது மனதில் அச்சத்தை ஏற்படுத்தும். அதேவேளையில், ஒரு பொருளை தடை செய்ததும், முற்றிலும் ஒழிந்து விடாது. படிப்படியாக புழக்கம் குறையும். வெளி சந்தையில் எளிதாகக் கிடைத்த பொருள், திருட்டுத் தனமாக விற்க வேண்டும் என்றால் பயப்படுவர். அபராதம், சிறை போன்றவற்றை விற்பனையாளர்கள் விரும்பமாட்டார்கள். மேலும், சில ஆண்டுகளுக்கு முன், புகையிலை உடல் நலத்துக்கு கேடு ஏற்படுத்தும் என, விளம்பரம் செய்யப்பட்டது. இப்போது, புற்றுநோய் ஏற்படும், என, விளம்பரம் செய்யப்படுகிறது. இதனால், குறிப்பிட்டளவு தாக்கம் புகையிலை பயன்பாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே, தடைச் சட்டத்தை தொடர்ந்து அமலாக்கும் போது, குட்கா, பான்மசாலா பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும்.

பிரசன்னா கண்ணன், மாநில ஆலோசகர், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம்

குட்கா, பான்மசாலா தடை சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதன் உற்பத்தியாளர்கள், முகவர்கள், கிடங்கு பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அளிக்க உள்ளோம். இதில், தடை செய்துள்ள குட்கா, பான்மசாலா போன்றவற்றை உற்பத்தி செய்யக்கூடாது; இருப்பு வைக்கக் கூடாது. தற்போது, வைத்திருக்கும் இருப்பை ஜூலை 29ம் தேதிக்குள் மாநிலத்தை விட்டு வெளியேற்றி விட வேண்டும். இல்லையேல் அழித்துவிட வேண்டும் என, அறிவிக்கிறோம். இந்த கால அவகாசம் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதையும் மீறி உற்பத்தி செய்தாலோ, இருப்பு வைத்திருந்தாலோ, உணவு பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் சென்று, அவற்றை அழிப்பர். இதேபோல், சிறு வணிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒருமாத காலத்துக்குப் பின்பு தான், வணிக இடங்களை ஆய்வு செய்து, குட்கா, பான்மசாலா பொருட்களை அழிப்போம். வெளி மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் வராமல் தடுக்க, சுங்க சாவடிகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்புகிறோம். மேலும், மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட, எட்டு அலுவலர்கள் கொண்ட குழுவை அமைக்க உள்ளோம். இக்குழு, மாவட்டங்களில் உள்ள வணிக இடங்கள் மற்றும் வாகனங்களில் உரிய சோதனைகளை மேற்கொண்டு, குட்கா, பான்மசாலா பொருட்கள் மாநிலத்துக்குள் வருவதை முழுமையாகத் தடுக்கும். குட்கா, பான்மசாலா பொருட்களைப் பயன்படுத்துவதால், உயிரை கொல்லும் புற்றுநோய் ஏற்படும் என்ற விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். எனவே, விழிப்புணர்வுக்கு தான் முதலிடம். தண்டனைக்கு அடுத்த இடம் தான்.

லட்சுமி நாராயணன், நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு

புகையிலை பொருட்கள் மனிதனுக்கு கேடு விளைவிப்பதால், அதை, தமிழக அரசு தடை செய்துள்ளது. இதை, வணிகர்கள் வரவேற்கிறோம். அரசு தடை செய்துள்ள புகையிலை பொருட்களை விற்க வேண்டாம் என, எங்கள் சங்கத்தின் சார்பில், எங்களது உறுப்பினர்களுக்கு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இதேநேரத்தில், குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு, தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தடையில்லை. இதனால், இப்பொருட்கள் தமிழகத்துக்குள் நுழைவதற்கு வழியுண்டு. எனவே, மாநில எல்லைகளில் உள்ள சுங்க சாவடிகளில், கடுமையான தணிக்கையை, அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாநிலத்துக்குள் நுழையும். இதனால், வணிகர்கள் பாதிக்கப்படுவர். குட்கா, பான்மசாலா தடை சட்டத்தை, சுகாதாரத் துறை தான் அமல் செய்கிறது, என்றாலும், போலீசார், உள்ளாட்சி துறை அதிகாரிகள் என, ஆள் ஆளுக்கு வணிகர்களை நாட்டாண்மை செய்யும் நிலையும் ஏற்படும். இதனால், வணிகர்கள் துன்புறுத்தப்படுவதோடு, லஞ்சம் பெருக வழி ஏற்படும். எனவே, தடை செய்த பொருட்களை மாநிலத்துக்குள் நுழையாமல் தடுக்க, அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பீடி, சிகரெட், மது வகைகள் விற்பனையில் குழப்பமான கொள்கையை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. உடலுக்கு கேடு விளைவிக்கும் இப்பொருட்களை பயன்படுத்தினால், தீங்கு ஏற்படும் என, விளம்பரப்படுத்த, பெரும் பணத்தை செலவிடுகின்றனர். ஆனால், அவற்றை தடை செய்ய முன்வராமல் உள்ளன. உடலுக்கு தீங்கு ஏற்படும் பொருட்கள், என, உறுதி செய்த பொருட்களை, நாடு முழுவதும் தடை செய்ய, அரசு முன்வரவேண்டும். இதற்கு, தெளிவான கொள்கையை உருவாக்க வேண்டும்.

விக்கிரமராஜா, தலைவர், தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு

No comments:

Post a Comment