Dec 24, 2012

எடை, தேதி, காலாவதி நாள் அவசியம் லேபிள் இல்லாத உணவு பொருளை விற்க கூடாது தமிழக உணவு பாதுகாப்பு திட்ட கமிஷனர் பேச்சு


கோவை, டிச.24:
லேபிள் இல்லாத உணவு பொருட் களை விற்க கூடாது, பாக்கெட்டில் எடை, தேதி, காலாவதி நாள் அவசியம் குறிப்பிட வேண்டும் என உணவு பாதுகாப்பு திட்ட ஆணையர் குமார்ஜெயந்த் பேசினார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு திட்ட ஆணையர் குமார்ஜெயந்த் பேசியதாவது:
உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் சுத்தமாக, தரமானதாக, விரைவில் கெட்டுப்போகாத அளவுக்கு தயாரிக்க வேண்டும். சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். உணவு பொருள் சைவம் என்றால் பச்சை புள்ளியும், அசைவம் என்றால் பிரவுன் புள்ளியும் பாக்கெட்டில் குறிப்பிட வேண்டும். உணவு பொருள் தயாரிப்பில் ஈடுபடுவோர் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்களுக்கு லேபிள் மிகவும் அவசியம். லேபிள் இல்லாத பொருட்களை தயாரித்து விற்க கூடாது. அதை கடைக்காரர்கள் வாங்கவும் கூடாது. லேபிளில் பொருள், அதன் எடை, உற்பத்தி தேதி, காலாவதி தேதி இருக்க வேண்டும்.
சாலையோர கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி பெரும்பாலும் சுகாதாரம் அற்றவையாக உள்ளன. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துகின்றனர். இது உடல்நலனுக்கு மிக மிக ஆபத்தானது. குடிக்கவும், கழுவவும் தனித்தனியாக தண்ணீர் வைத்திருக்க வேண்டும். மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைக்கவேண்டும்.
இவ்வாறு குமார்ஜெயந்த் பேசினார்.
கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கி பேசுகையில், “எந்த ஒரு பொருளுக்கும் பிராண்ட் நேம் இருக்க வேண்டும். பெயர் பெற்ற நிறுவனத்தின் பிராண்ட் நேமை போல காப்பியடித்து விற்பனை செய்யக்கூடாது. தரமான, கலப்படமற்ற, நோய் வராமல் பாதுகாக்க கூடிய அளவுக்கு உணவு பொருள் விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு நல்ல, தரமான உணவு கிடைக்க வேண்டும். இதை வியாபார நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். வியாபார நிறுவனங்கள் மீது வழக்கு போடுவது நோக்கம் அல்ல. உணவே மருந்து, மருந்தே உணவு என்று திருமூலர் கூறியிருக்கிறார். உணவை தவறாக சாப்பிட்டாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தும்,என்றார்.
அன்னபூர்ணா குரூப் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், சட்டமான பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருக்க கூடாது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி தவறு செய்தவர்களுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது. எனவே இது போன்ற கடுமையான தண்டனைகள் நீக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். சென்னையில் உள்ளது போல கோவையில் உணவு பொருட்களை சோதனை செய்ய ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என்றார்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், சுகுணா கோழி பண்ணை நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன், தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க தலைவர் கருப்பையா, உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் ஜெயக்குமார், அதிகாரிகள் சீனிவாசன், சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.

1 comment: