Oct 8, 2018

ஆசிஃப் பிரியாணி’ கிளையில் நூல் பிடித்த அதிகாரிகள்.. ரெய்டில் சிக்கிய 2000 கிலோ அழுகிய இறைச்சி!

நேற்று முன்தினம், ஆசிஃப் பிரியாணியின் கிண்டி தலைமை கிச்சனுக்குள் புகுந்த உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான டாக்டர் கதிரவன் அதிரடி ரெய்டு நடத்தி சீல் வைத்தார். ஜூ.வி வாசகர் ஒருவர் கோயம்பேடு ஏரியாவில் உள்ள ஆசிஃப் பிரியாணி கடையில் தரமற்ற மட்டன் பிரியாணி சப்ளை செய்ததைக் கண்டுபிடித்து தகவல் சொல்ல… கோயம்பேடு கிளைக்கு எங்கிருந்து பிரியாணி சப்ளை ஆகிறது என்பதை விசாரித்து கிண்டியில் உள்ள அந்த ஹோட்டலின் கிச்சனில் ரெய்டு நடத்த உத்தரவிட்டிருந்தார் தமிழக அரசின் உணவு பாதுகாப்புப் பிரிவு கமிஷனர் அமுதா. “இனி அப்படி நடக்காது. தவறுகளைத் திருத்திக்கொள்கிறோம்’’ என்கிற ரீதியில் ஹோட்டல் நிர்வாகத்தினர் டாக்டர் கதிரவனிடம் கடிதம் கொடுத்துவிட்டு சீலை எடுக்கும்படி காத்திருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க…
சென்னையின் பிரபல ஹோட்டல்களில் பரிமாறப்படும் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகள் தரமானதுதானா?
…என்கிற விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள். மக்கள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் செயல்படும் சில நான்வெஜ் ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி சப்ளை ஆவது தொடர்பாக ரகசிய விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து கெட்டுப்போன இறைச்சிகளை தெர்மோ கூல் பாக்ஸில் பேக் செய்து அனுப்பி வருகிறது ஒரு பயங்கர கும்பல். இதற்கென சென்னையின் பல பகுதிகளில் ஏஜென்டுகள் உண்டு. இவர்கள் மூலம் சந்தடியில்லாமல் குறைந்த விலைக்குக் கடைகளுக்கு இறைச்சி சப்ளை ஆகிவிடும். ஆசிஃப் ஹோட்டல் ரெய்டுக்குப் பிறகு, உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ரகசிய வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.
நேற்று (5.10.2018) அவர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டையில் ஓர் இடத்தில் சர்ப்ரைஸ் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். 2,000 கிலோ இறைச்சி கெட்டுப்போன நிலையில் கைப்பற்றியிருக்கிறார்கள்.
சென்னை ஹோட்டல்களுக்குத் தரமற்ற இறைச்சியை சப்ளை செய்யும் நெட்வொர்க்கை ரகசியமாக நடத்திவரும் கோஷ்டிகளில் முக்கியமானது சக்திவேல் கோஷ்டி. இதுபற்றி டாக்டர் கதிரவன் நம்மிடம் கூறும்போது, “மாடு, பன்றி, கன்றுக்குட்டி… ஆகியவற்றைக் கொன்று அதன் இறைச்சியைச் சாதாரண தெர்மோ கூல் பாக்ஸில் அனுப்புகிறார்கள். இந்த மாதிரி, அண்ணாசாலை பாடிகாட் முனீஸ்வரன் கோயில் அருகே ஒரு கும்பல் கெட்டுப்போன இறைச்சியைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்து ரெய்டு நடத்தினோம். அங்கே சிக்கிய சக்திவேல் கோஷ்டியைச் சேர்ந்த ஐந்து பேரைப் பிடித்தோம். அவர்களைப் போலீஸில் சொல்லி கைது செய்து சிறையில் அடைத்தோம். அப்போது, அந்தக் கோஷ்டியிடமிருந்து 500 கிலோ இறைச்சியைக் கைப்பற்றி அழித்தோம்.
அதேபோல், இன்றும் எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைக்கவே சிந்தாதிரிப்பேட்டையில் ரெய்டு நடத்தினோம். அதே, சக்திவேல் கோஷ்டிதான் சிக்கியது. இறைச்சிகள் குவியலாகப் போட்டுவைக்கப்பட்டிருந்த இடத்தைப் பார்த்தால், குமட்டிக்கொண்டு வந்தது. துர்நாற்றம் வீசியது. சுகாதாரமற்ற நிலையில் கிடந்த 2,000 கிலோ இறைச்சியைக் கைப்பற்றி அழித்தோம். மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை இந்த இறைச்சி. இதன் பின்னணி தெரிந்தே, சிலர் வாங்கிச்செல்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆட்டு இறைச்சியின் விலை அதிகம். ஆனால், மாடு, பன்றி, கன்றுக்குட்டி ஆகியவற்றின் இறைச்சி விலை குறைவு. இவற்றை வெட்டி, இறைச்சியைக் கடத்தி விற்கிறார்கள். அதை வாங்குகிறவர்கள் ஆட்டு இறைச்சிக்குப் பதிலாக இவற்றைக் கலந்து சமைக்கிறார்கள். இது மிகவும் தவறானது. இந்தக் கொடுஞ்செயலை யார் செய்தாலும் தண்டனைக்கு உரியக் குற்றம்" என்றார்.
இனி பிரபல ஹோட்டல்களில் சாப்பிடப் போகும்போது உணவு தரமில்லாமலோ, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவினாலோ… உடனே உணவு பாதுகாப்புத்துறை கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுங்கள். நீங்கள் பார்த்த காட்சியைப் படம் பிடித்துக் குறிப்புடன் சென்னை தேனாம்பேட்டையில் மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் அமுதா ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில் இயங்கும் கன்ட்ரோல் ரூமுக்கு (வாட்ஸ் அப்/ செல் எண் 94440 42322) தகவல் தெரிவியுங்கள்.

1 comment:

  1. Food Safety And Standards Scheme (FSSAI) In Hindi के इस लेख मे आप Food Safety And Standards Scheme Details, Food Safety And Standards ACT 2006 In Hindi, Food Safety And Standards Rules 2011 के बारे मे जानेंगे। साथ ही आपको इस लेख मे FSSAI CEO और FSSAI Chairman कौन है उसकी जानकारी दी गई है। इसके साथ इस लेख मे Food Safety Online, FSSAI Full Form, FSSAI Requirements-Jobs, FSSAI Contact से जुड़ी जानकारी दी गई है। इस लेख मे आपको FSSAI ACT 2006 PDF, और Food Safety And Standards ACT 2006 PPT भी दी गई है। इसके अतिरिक्त इस लेख मे आपको Pradhan Mantri Schemes की जानकारी भी दी गई है। Food Safety And Standards Scheme

    ReplyDelete