Nov 15, 2017

பள்ளி அருகே புகையிலை பொருள் விற்க தடை

கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தில் உள்ள, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அருகில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், அபராதம் விதிக்கப்படும்' என, மாநில கல்வித் துறை எச்சரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வில், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில், பான் பராக், சிகரெட், பீடி போன்ற புகையிலை தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், மாணவர்கள் அவற்றை பயன்படுத்துவதும் உறுதியானது.
அறிக்கை : ஆய்வின் அடிப்படையில், அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும், மாநில கல்வித் துறை அமைச்சர், பார்த்தா சட்டர்ஜி அனுப்பிய அறிக்கை: பொது இடங்களில், புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்டோர், புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நகரில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. இது சட்டத்திற்கு எதிரானது.
அபராதம் : எனவே, மாநிலம் முழுவதும், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவன வளாகங்கள் அனைத்திற்கும் அருகில், 100 மீ., சுற்றளவில், புகையிலை தயாரிப்பு பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். தடையை மீறுவோருக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை, கல்வி நிறுவனங்கள், கல்வித் துறை ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி களில், சிகரெட், பீடி துண்டு கள், புகையிலை கறைகள் போன்றவை இருக்கக் கூடாது. கல்லுாரி கேன்டீன் மற்றும் விடுதிகளில், புகையிலை மற்றும் புகையிலை தயாரிப்புகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment