Nov 13, 2017

சேலத்தில் குட்கா, ஹான்ஸ் விற்பனை இல்லை: போலீஸ் சோதனையால் வியாபாரிகள் முடிவு

சேலம்: சேலத்தில், குட்கா, ஹான்ஸ் விற்பவர்களை போலீசார் கைது செய்து வருவதால், அவற்றை விற்பனை செய்வது இல்லை என, வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 
சேலம் போலீஸ் கமிஷனராக சங்கர், அக்.,11ல் பொறுப்பேற்றது முதல், தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, குட்கா, ஹான்ஸ் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும், ஒழிக்க இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, அக்.,20 முதல் நேற்று வரை, 250 வியாபாரிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன், மாணவர்களிடம் குட்கா விற்பனை செய்ததாக, நான்கு பேரை அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ், ஜாமினில் வெளியே வராதபடி கைது செய்தார். இது, வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸ் அதிரடியால், சேலம் நகரின் பல இடங்களில் உள்ள சிறிய மளிகை, டீ கடைகளில் குட்கா, ஹான்ஸ் விற்பனை செய்வது இல்லை என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
சேலம் மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பெரியசாமி கூறியதாவது: போலீசாரின் நடவடிக்கைக்கு, வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஹான்ஸ், குட்கா பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம். அதையும் மீறி விற்பனை செய்தால், போலீஸ் எடுக்கும் நடவடிக்கையில், சங்கம் தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார். வியாபாரிகளின் இந்த அறிவிப்பு, போலீஸ் அதிகாரிகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment