Sep 21, 2017

பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் போதை பாக்கு பாக்கெட்டுகள் பறிமுதல் 7 பேர் கைது

பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் போதை பாக்கு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொழில் அதிபர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 
கோவை,
கோவையில் உள்ள ஒரு வீட்டுக்கு கன்டெய்னர் வேனில் போதை பாக்கு (பான்பராக்) பாக்கெட்டுகள் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று கன்டெய்னர் வேனை திறந்து சோதனை நடத்தினர்.
அதில் குவியல், குவியலாக போதை பாக்கு பாக்கெட்டுகள் இருந்தன. அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு சிறிய வேனிலும் போதை பாக்கு பாக்கெட்டுகள் காணப்பட்டன.
இதுதொடர்பாக வேன் டிரைவர்களிடம் விசாரணை நடத்திய போது, பெங்களூருவில் இருந்து போதை பாக்கு பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டு கோவை மாவட்டம் முழுவதும் வடமாநில தொழில் அதிபர்கள் சப்ளை செய்து வருவது தெரியவந்தது. பிடிபட்ட போதை பாக்கு பாக்கெட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
இதையடுத்து வட மாநில தொழில் அதிபர்கள் பவர்லால் (வயது 40), மஞ்சுலால் (43), டிரைவர்கள் அனுமன்ராம் (21), சானிவால் ராம் (25), சுந்தர் (29), தொழிலாளர்கள் சலீம் (27), சாவாராம் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கைதான தொழில் அதிபர் பவர்லால், கோவையில் குடோன் வைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் இங்கிருந்து போதை பாக்கு பாக்கெட்டுகளை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கின் போது சட்டவிரோதமாக போதை பாக்கு பாக்கெட்டுகளை பதுக்கி வைத்தது தொடர்பாக தன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, கோவை போலீஸ் துணை கமி‌ஷனராக இருந்த சுகுமார் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் பவர்லால் புகார் செய்தார்.
இது தொடர்பாக சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment