Jul 15, 2017

காற்றில் பறக்கும் இறைச்சிக் கடைகளுக்கான விதிமுறைகள்: சுகாதாரமாற்ற நிலையில் சாக்கடைகளுக்கும், சாலை ஓரங்களிலும் விற்கப்படும் இறைச்சிகள்

ஞாயிற்றுக்கிழமை வந்தததும் பெரும்பாலான வீடுகளில் மாமிச உணவின் மசாலா பலரை சுண்டியிழுக்கும். காலையில் ஒவ்வொரு பகுதியிலும் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
நகர் புறமாக இருந்தாலும்,கிராமப் புறமாக இருந்தாலும் சாக்கடை அருகிலும், குப்பைகள் அருகிலும்தான் மாமிசக் கடைகள் அமைக்கப்பட்டு, அங்கு திறந்த வெளியில் ஆடு,மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகள் வியாபித்திருப்பதையும், பெரும்பாலானவர்கள் அங்கு தான் இறைச்சிகளை வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருப்பதையும் காணலாம்.
இறைச்சி கடைகளுக்கான விதிமுறைகள் என்ன? கடையின் தரை மற்றும் சுவர்கள், எளிதில் சுத்தம் செய்யப்படும் வகையில் இருக்க வேண்டும். கழிவுகளை சேகரிக்க, மூடியுடன் கூடிய குப்பை தொட்டி,கழிவு நீரை வெளியேற்ற, முறையான இணைப்பு அமைத்திருக்கவேண்டும். ஈ, பூச்சி தொல்லை ஏதும் ஏற்படாத வகையில், கடையில் கம்பி வலையுடன் கதவுகள்,பணியாட்களுக்கு தொற்று நோய் ஏதும் இல்லை என்ற மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஆடுகளை அனைவரின் பார்வை படும்படி அறுக்கக் கூடாது. எலும்புகள் மற்றும் கழிவுகள், தோல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். துருப்பிடித்த கத்திகளை பயன்படுத்தக் கூடாது. இறைச்சியை கழுவ சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும். வெட்டப்படும் ஆடுகள் சுகாதாரமானவை என சான்றிதழ் பெற வேண்டும். மாநகராட்சி இறைச்சி கூடத்தில் வெட்டப்பட்ட, இறைச்சியையே விற்க வேண்டும்.இறைச்சியை கூடத்திலிருந்து எடுத்துச் செல்ல, மூடியுடன் கூடிய அலுமினியப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
மாறாக திறந்த நிலையில், சைக்கிள் அல்லது வேறு வண்டிகளை பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் கூடும் இடங்களில் இறைச்சிக் கடைகள் இருக்கக்கூடாது. 50 மீட்டர் தள்ளியே அமைந்திருக்க வேண்டும். அதை போல் வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டர் தூரம் தள்ளியிருக்க வேண்டும்.
மேற்கண்ட இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் முதற்கட்டமாக நோட்டீஸ் அளிக்கப்படும். மீண்டும் அந்த தவறை தொடர்ந்தால் லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டு கடை மூடப்படும் போன்றவை இறைச்சிக் கடைகள் நடத்தப்படுவதற்கான விதிமுறைகள்.
ஆனால் நடைமுறையில் இருப்பது என்ன? இறைச்சிக் கடைகள் எவ்வாறு செயல்படுகிறது? சாலையோரங்கள், சுகாதாரமற்ற பகுதிகளில் கால்நடைகளை கொன்று வெட்டி விற்பனை செய்கின்றன.
பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது குறித்தும், அதற்கான விதிமுறைகள் குறித்தும் விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் வரலட்சுமியிடம் கேட்டபோது, ''ஆறு விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். நீங்கள் செல்லும் இறைச்சிக் கடை தினந்தோறும் திறக்கக் கூடியதா? அந்தக் கடைக்கு அரசு உரிமம் உள்ளதா? கடையில் சுத்தமான சூழல் உள்ளதா? இறைச்சி பக்கத்தில் நிற்கும்போது மொஞ்சை (கவுச்சி) வாடை அடிக்கக் கூடாது.
இறைச்சி நிறம் மிகவும் சிவப்பாகவோ, மிக அதிகம் வெளுத்துப்போயோ இருக்கக் கூடாது. இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். கறியைத் தொட்டுப் பார்த்தால் ஜில் என இருக்கக் கூடாது. அப்படி 'ஜில்’ என இருந்தால் அது குளிர்பதனப் பெட்டியில் வைத்த முந்தைய நாள் இறைச்சியாக இருக்கலாம். இவற்றைக் கவனித்து வாங்கவேண்டும்
மேலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில். திறந்தவெளியில் நடத்தப்படும் இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் இறைச்சிக் கடைகள் நடத்துவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சியை மேற்கொள்ள உள்ளோம். மாவட்டத்தில் சுகாதாரமான, பாதுகாப்பான இறைச்சிகள் விற்பனையை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.
இறைச்சியை உண்ணும்போது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுநலன் அறுவை சிகிச்சை நிபுணர் சரவணனிடம் கேட்டபோது, ''பொதுவாக, ஆடு மாடு உடலில் கிளாடீரியம், ஸ்டப்லா காகஸ், எக்கினோ காகஸ், ஈகோலி, ஆஸ்காரிஸ் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆடு மாடு இறந்ததும் இவை அதிக அளவில் பல்கிப் பெருகி அதைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன.
இதனால், இறைச்சி அழுக ஆரம்பிக்கிறது. மேலும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம். எனவே கால்நடைகளை வெட்டிய அடுத்த சில மணிநேரங்களில் சமைத்து உண்பது நல்லது. ஆட்டுத்தொட்டியில் வெட்டப்படும் இறைச்சியை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பதப்படுத்தாமல் வைத்திருந்தால், இறைச்சி அழுகத் துவங்கிவிடும். இறைச்சியை குளிர்பதனப் பெட்டிகளில் மைனஸ் 15 முதல் 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
கெட்டுப்போன இறைச்சியில் உள்ள கிருமிகள் மனித உடலுக்குள் செல்லும்போது, ரத்தக் குழாய்கள் வழியே சென்று மூளையைப் பாதிக்கும். ஹைடாடிட் என்ற ஒட்டுண்ணியானது கல்லீரலுக்குச் சென்று அங்கு கட்டியை உருவாக்கும். நுரையீரலை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச்சினை, இடைவிடாத இருமல், சளி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். தசைகளில் தங்கும் கிருமிகள் தீராத வலியை ஏற்படுத்தும். இதுதவிர, வாந்தி பேதி போன்றவையும் ஏற்படலாம். ஈக்கள் மொய்க்கும் இறைச்சியை வாங்கி உண்ணும் போது காலரா போன்ற நோய்கள் ஏற்படலாம்" என்றார்.

No comments:

Post a Comment